நடக்க முடியாமல் மயங்கிய பெண் யானை; மீட்டு தேற்ற முயன்ற வனத்துறை – சிகிச்சை பலனின்றி இறந்த சோகம்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் வனப்பகுதியில், தலையணை அமைந்திருக்கிறது. அந்தப் பகுதியில், சங்கரன்கோவில் வனச்சரக வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது, அங்கே காட்டுக்குள் ஒரு யானை விழுந்து கிடந்திருக்கிறது. அதைச் சுற்றிலும் நிறைய யானைகள் கூட்டமாக நிற்பதைப் பார்த்திருக்கின்றனர்.

யானைக் கூட்டம்

அதனால் அந்த இடத்திலிருந்த யானைகளை விரட்டிவிட்டு கீழே கிடந்த யானையின் அருகில் சென்று பார்த்திருக்கின்றனர். காட்டுக்குள் கிடந்த அந்த யானை சுமார் 40 வயது மதிக்கத்தக்கதாக இருந்திருக்கிறது. அந்தப் பெண் யானை, நோய்வாய்ப்பட்டிருந்ததால் எழுந்து நடமாட முடியாமல் உணவு கிடைக்காமல் கிடந்திருக்கிறது.

உடனடியாக அதிகாரிகள் அந்த யானை குறித்து தென்காசி மாவட்ட வன அலுவலர் முருகன் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் யானை நடக்க முடியாமல் கிடப்பதன் காரணத்தைக் கண்டுபிடிக்கும் வகையில் வனத்துறை கால்நடை மருத்துவர் குழு மற்றும் நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவக் குழுவினர் நேரில் சென்று சிகிச்சை அளித்தனர். யானைக்கு குளுக்கோஸ், ஊசி மூலம் மருந்துகள் செலுத்தப்பட்டன,

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த யானை

சற்று தெளிச்சல் அடைந்த யானைக்கு பழங்கள், வெல்லம், தென்னை ஓலை ஆகிய உணவுகள் கொடுக்கப்பட்டன. அவற்றை யானை சாப்பிட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று திடீரென உயிரிழந்தது. உடனடியாக அதே இடத்தில் வைத்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, சில பாகங்களை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். குடலில் ஏற்பட்ட நோய்த் தாக்கமே யானை உயிரிழப்புக்குக் காரணம் என்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.