புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. நன்னடத்தைக் காரணமாக பேரறிவாளன் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். சட்டப்பிரிவு 142ன் கீழ், உச்ச நீதிமன்றம் தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்தது.
பேரறிவாளன் விடுவிக்கப்பட்ட அதே முறையில், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரும் கடந்த 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் சீராய்வு மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ததை அடுத்து காங்கிரஸ் கட்சியனரிடம் இருந்தே அக்கட்சிக்கு அழுத்தம் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே, சீராய்வு மனு தாக்கல் செய்ய அக்கட்சி திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 6 பேரில் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.