நீர் வழங்கலுக்கு ஏற்படுகின்ற செலவீனங்களுக்கு ஏற்ற வகையில் நீர் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள், நீர் வழங்கல் விவகார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு முன்மொழிந்துள்ளனர்.
ஒரு லீட்டர் நீரை வாடிக்கையாளர்களுக்கு இதுவரை 2 சதத்துக்கே வழங்கி வந்ததாகவும், அண்மையில் இதனை 5 சதமாக அதிகரித்திருந்ததாகவும் சுட்டிக்காட்டிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள், ஒரு லீட்டர் நீரைச் சுத்திகரிப்பதற்கு 12 சதம் முதல் 14 சதம் வரையில் செலவு ஏற்படுவதாகத் தெரிவித்தனர்.
அமைச்சர் கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நீர் வழங்கல் விவகார அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் (17) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அண்மையில் நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டபோதும், நீரைச் சுத்திகரிப்பதற்கான செலவீனம் முன்னரைவிட 50 வீதத்தினால் அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். இதனால் தற்பொழுது காணப்படும் நீர் கட்டணம் செலவீனத்துடன் ஒப்பிடும்போது போதுமானதாக இல்லையென்றும் தெரிவித்தனர். விசேடமாக தற்பொழுது காணப்படும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் நீர் விநியோகத் திட்டங்களுக்காக நிதி ஒதுக்குவதில் சிரமங்கள் இருப்பதால், நீர் கட்டணத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதன் ஊடாக ஓரளவு சேமிப்பை ஏற்படுத்த முடிந்தால், அவற்றை நீர் திட்டங்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சமுர்த்தி பயனாளிகள், முதியோர் சமூகம் உள்ளிட்ட குறைந்த வருமானம் பெறுபவர்கள் தவிர்ந்த ஏனைய தரப்பினருக்கான நீர் கட்டணத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்துவதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
மேலும், குடிநீர் போத்தல்களின் ஊடாக அரசாங்கத்துக்கு வரியை அறவிடுவது தொடர்பிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள நீர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் அமைச்சர் கௌரவ ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ சனத் நிசாந்த, கௌரவ அநுராத ஜயரத்ன, கௌரவ கனக ஹேரத், கௌரவ கீதா குமாரசிங்ஹ, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கபில அதுகோரல, கௌரவ சுமித் உடுகும்புற, கௌரவ ஜகத் சமரவிக்ரம, கௌரவ சஞ்சீவ எதிரிமான, கௌரவ குணதிலக ராஜபக்ஷ, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ மதுர விதானகே, கௌரவ சுதத் மஞ்சுல, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ எம்.எஸ்.தௌபீக், கௌரவ சம்பத் அத்துகோரள, கௌரவ வீரசுமன வீரசிங்ஹ, கௌரவ வருன லியனகே மற்றும் கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிப்பிட்டிய ஆகியோர் கலந்துகொண்டனர்.