நெல்லை மாவட்டம், மூலக்கரைப்பட்டி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சித்திகா பானு. 26 வயதான அவர், தன் கணவன் சுல்தான் பாதுஷாவுடன் சூப் வியாபாரம் செய்யும் கடையை நடத்திவருகிறார். தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாக அவரால் தொடர்ந்து கடையை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் கந்துவட்டி வாங்கி, கடையை விரிவுபடுத்த முடிவுசெய்திருக்கிறார்.
அதற்காக நெல்லை கே.டி.சி.நகர், மங்கம்மாள் சாலையில் வசிக்கும் கந்தையா என்பவரிடம் கடன் வாங்கியிருக்கிறார். 43 வயதான கந்தையா, வட்டிக்குப் பணம் கொடுப்பதையே தொழிலாக நடத்திவந்திருக்கிறார். அவரிடம் சித்திகா பானு, தனக்குத் தேவையான 10,000 ரூபாய் கடனைப் பெற்றிருக்கிறார். அந்தத் தொகைக்கு வாரம்தோறும் 1,000 ரூபாய் வட்டியாகக் கொடுக்க வேண்டும் என்பது அவர்களுக்கு இடையிலான வாய்மொழி ஒப்பந்தமாம்.
கடந்த 29 வாரங்களாக சித்திகா பானு வாரம்தோறும் ஆயிரம் ரூபாய் வட்டியாகச் செலுத்தியிருக்கிறார். சூப் கடை சரிவர நடக்காததாலும், தன் கணவருக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாகவும் கடந்த மூன்று வாரங்களாக அவரால் வட்டி கட்ட முடியவில்லை. தொடர்ந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்துவந்த கந்தையா, கடந்த 16-ம் தேதி சித்திகா பானு, அவர் தாயார் ஆகியோரை அவதூறாகப் பேசியதுடன், தனது காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றிருக்கிறார்.
நோயால் அவதிப்பட்ட சுல்தான் பாதுஷாவை செல்போனில் தொடர்புகொண்ட கந்தையா, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தினால் மட்டுமே சித்திகா பானுவையும், அவருடைய தாயாரையும் விடுவிப்பதாக எச்சரித்திருக்கிறார். அதனால் மனமுடைந்த சுல்தான் பாதுஷா, வீட்டில் விஷம் அருந்தினார். அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சுல்தான் பாதுஷா விஷம் அருந்திய தகவல் கிடைத்ததும் தன்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்துவிடுவார்கள் என அஞ்சிய கந்துவட்டி கந்தையா, சிறைப்பிடித்து வைத்திருந்த சித்திகா பானுவையும், அவருடைய தாயாரையும் திருப்பி அனுப்பியிருக்கிறார். நடந்த சம்பவம் பற்றி மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் சித்திகா பானு புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் செல்வி, கந்துவட்டி புகாருக்குள்ளான கந்தையாவைக் கைதுசெய்தார்.
கந்துவட்டி கொடுமைக்காகப் பெண்களைக் கடத்திச் செல்லப் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. கந்தையாவிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்மீது ஏற்கெனவே மூன்று வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். கந்துவட்டி கொடுக்க முடியாத பெண்ணையும் அவரின் தாயாரையும் கடத்திச் சென்ற விவகாரம் மூலக்கரைப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.