திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து எண் 30. இந்த பேருந்து பல்லடம்- திருப்பூர் வழித்தடத்தில் சேடபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதூர், வழியாக திருப்பூர் சென்று வருகிறது.
இந்நிலையில் நேற்று இந்த பேருந்து, பல்லடத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததபோது ஆறுமுத்தாம்பாளையத்தில் உள்ள குட்டை அருகே செல்லும்போது எதிரே கார் ஒன்று வந்தது. அந்த காருக்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை சாலையின் ஓரமாக ஓட்டினார். அப்போது, குட்டையின் கரை பகுதியில் மழை பெய்ததால் சேரும் சகதியுமாக இருந்தது.
அதில் பேருந்தின் முன் சக்கரம் இறங்கி விபத்து ஏற்பட்டதனால் பேருந்து லேசாக சாய்ந்த நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த விபத்துக்கு குறித்து தகவல் அறிந்த வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்த பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் பேருந்தை மீட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த விபத்துக்கு குறித்து பொதுமக்கள் தெரிவித்ததாவது, “விடுமுறை நாளில் இந்த விபத்து ஏற்பட்டதால் எந்தவிதமான சேதமும் இல்லை. இதுவே மற்ற நாளில் நடந்திருந்தால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் என்று நிறைய பேர் பயணம் செய்திருப்பார்கள். அவர்கள் விபத்தில் சிக்கி இருந்தால் நிலை மோசமாக இருந்திருக்கும்” என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.