மகாராஷ்டிர மாநிலத்தில், உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த போது, அவரது சிவசேனா கட்சியில் இருந்து, ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் விலகினார். இந்துத்துவா கொள்கையில் இருந்து திசைமாறியதாகவும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததாலும் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறினார். இதையடுத்து அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவின் முதலமைச்சர் ஆனார்.
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் தற்போது முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா கட்சிக்கு, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பும், உத்தவ் தாக்கரே தரப்பும் உரிமைக் கோரி வருவதால், அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த, இரு தரப்புக்கும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, அண்மையில், அவுரங்கபாத்தில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “உங்கள் லட்சிய மனிதர் யார் என்று யாராவது கேட்டால், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஸ் சந்திரபோஸ் என கூறுவீர்கள். ஆனால் மராட்டியர்களான உங்களுக்கு பல லட்சிய மனிதர்கள் உள்ளனர்.
நீங்கள் அவர்களை தேடி வெளியே செல்ல வேண்டியதில்லை. மகாராஷ்டிர மாநிலத்தில் நீங்கள் அவர்களை காணலாம். சத்ரபதி சிவாஜி மகாராஜ் இப்போது பழைய லட்சிய மனிதராகி விட்டார். பாபா சாகேப் அம்பேத்கர் முதல் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி வரையிலான தலைவர்களில் ஒரு புதிய லட்சிய மனிதரை நீங்கள் காணலாம்,” என தெரிவித்து இருந்தார்.
சத்ரபதி சிவாஜியை பழைய லட்சிய மனிதர் என்று ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி குறிப்பிட்டதற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பாஜக கூட்டணியில் உள்ள, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது,‘‘சத்ரபதி சிவாஜி மகாராஜின் லட்சியங்களுக்கு ஒருபோதும் வயது ஆகாது. அவரை உலகில் வேறு எந்த பெரிய மனிதருடன் ஒப்பிட முடியாது என்பதை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி புரிந்து கொள்ள வேண்டும். மத்திய பாஜக தலைவர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், மாநிலத்தின் வரலாறு தெரியாத ஒரு நபரை, வேறு எந்த இடத்திற்காவது டிரான்ஸ்பர் செய்யுங்கள்’’ என கடுமையாக தெரிவித்தார்.
இந்தநிலையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததையடுத்து, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி இன்று கூறும்போது, ‘‘சத்ரபதி சிவாஜி மகாராஜா எங்களுக்கு கடவுளை போன்றவர். பெற்றோருக்கும் மேலாக நாங்கள் அவரை நேசித்து வருகிறோம்’’ என்றார்.