சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தனியார் மஹாலில் கூட்டுறவுத் துறையின் சார்பில் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இவ்விழாவின்போது கூட்டுறவு சங்கங்களுக்கு, சேவை சரக்கு வாகனங்களுக்கான சாவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் ஆகியோர் வழங்கினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஐ. பெரியசாமி இவ்வாறு பேசினார்;
கூட்டுறவு துறையும் அரசின் மற்ற துறைக்கு நிகராக நான்கு சதவீத அகவிலை படியை உயர்த்தி வழங்கியுள்ளோம். மேலும், சுமார் 6,500 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்ற ஜனவரி மாதத்தில் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மாதம் 1000 ரூபாய்
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி இந்தியாவில் முதல்வருக ளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தக்க தருனத்தில் அதனை அறிவிப்பார் என்று கூறினார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஓரிரு மாதங்களில் அறிவிப்பு
இதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், கடந்த ஆட்சியில் இருந்த அதிமுக கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுள்ளது. அதனால் இந்த அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. உரிமை தொகை திட்டம் தாமதமாக அதுதான் காரணம். இந்த திட்டம் ஓரிரு மாதங்கள் மட்டுமே என்றால் நிறைவேற்றிவிடலாம். ஆனால், காலத்துக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதால் தாமதமாகிறது. இத்திட்டத்திற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது என்றும் இன்னும் மூன்று மாதங்களில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்” என கூறினார்.
தேர்தல் அறிக்கை
திமுக தேர்தல் அறிக்கையில் மொத்தம் 505 வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. குறிப்பாக, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, நீட் தேர்வு ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000, முதியோர் ஓய்வூதியம் ரூ.1500, கல்வித் துறை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை சொல்லலாம்.
அதிலும், மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தை அரசு எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு பெருமளவில் எழுந்துள்ளது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில் உரிமைத் தொகை திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பார் என்றும் அமைச்சர்கள் அவ்வப்போது தகவலிட்டு வருகின்றனர்.