சென்னை மேடவாக்கம் மாம்பாக்கம் பிரதான சாலை பாபு நகர் பகுதியில் மப்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்து 12 பள்ளி மாணவர்களை வீட்டிற்கு விடுவதற்காக சென்றுள்ளது. பாபு நகர் பகுதியில் ஒரு குழந்தையை இறக்கி விடுவதற்கு தனியார் பள்ளி வாகனம் நின்றுள்ளது. இந்நிலையில், டி நகரிலிருந்து கொளத்தூர் நோக்கிச் சென்ற 51 வி என்ற அரசு பேருந்தை காசிநாதன் ஓட்டியும் நடத்துநர் கங்காதரன் என்பவர் சென்றுள்ளார். அப்போது திடீரென அரசு பேருந்து ஓட்டுனர் காசிநாதனுக்கு மயக்கம் ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார்.
இதனால் அரசு பேருந்து முன்னாள் மாணவர்களை இறக்கி விட்டுக் கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்தின் பின் பகுதியில் மோதியது. தனியார் பள்ளி பேருந்தின் பின்பக்கம் மீது மோதியதில் தனியார் பள்ளி பேருந்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 3 ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமிக்கு சிறிய காயமும், அரசு பேருந்து ஓட்டுநர் காசிநாதனுக்கு பலத்த காயமும், பேருந்தில் பயணித்த இரண்டு பெண்மணிகளுக்கு சிறிய அளவில் காயமும் ஏற்பட்டது.
சிறிய காயங்கள் ஏற்பட்ட 3 ம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனை அழைத்துச் சென்றனர். பலத்த காயங்களுடன் அரசு பேருந்து ஓட்டுனர் காசிநாதன் அரசு பேருந்தின் ஸ்டேரிங்ல் மாட்டிக் கொண்டார்.
மதியம் சாப்பிட்ட உணவு மற்றும் ரத்தம் வாயின் வழியாக வெளியே வந்து மயங்கி உள்ளார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்தில் பயணித்த சக பயணிகள் 108 ஆம்புலன்சில் ஏற்றி குரோம்பேட்டையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்திற்கு உள்ளான அரசு பேருந்தில் பயணம் செய்ததில் சிறிய காயங்களுடன் இருந்த இரண்டு பெண்மணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் இருந்த அரசு பேருந்து மற்றும் தனியார் பள்ளி பேருந்து பேருந்துகளை அப்புறப்படுத்தினார். இதனால் மேடவாக்கம் மாம்பாக்கம் பிரதான சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது போலீசார் போக்குவரத்தை சரி செய்து சீரான முறையில் வாகனங்கள் செல்கின்றன.