ஸ்ரீநகர்: தேசிய மாநாடு கட்சியின் சார்பில் காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பேசியதாவது:
இந்திய பிரிவினை காலத்தில் முகமது அலி ஜின்னா எனது தந்தை ஷேக் முகமது அப்துல்லாவின் ஆதரவை கோரினார். அப்போது எனது தந்தை இந்தியாவுக்கு ஆதரவு அளித்தார். நல்ல வேளையாக காஷ்மீர் பாகிஸ்தானோடு இணையவில்லை. இந்தியாவில் 80 சதவீதம் பேர் உள்ள இந்துக்கள் ஆபத்தில் இருப்பதாக அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
எந்த மதமும் தீங்கானது கிடையாது. அந்தந்த மதங்களில் இருக்கும் தீய மனிதர்கள்தான் தீமையை விளைவிக்கின்றனர். ராமர், இந்துக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை. அவர் பொதுவானவர். வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் வலிமை. இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய மாநாடு கட்சித் தலைவர் பதவியில் இருந்து பரூக் அப்துல்லா விலகியுள்ளார். புதிய தலைவர் பதவியேற்கும் வரை கட்சியின் தலைவராக அவர் நீடிப்பார் என்று தேசிய மாநாடு கட்சி அறிவித்துள்ளது.