டெல்லி: ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் 71,000 பேருக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
நாடும் முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் “ரோஜ்கார் மேளா” திட்டத்தை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இதன்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் கட்டமாக 75,000 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டது. 2-வது கட்டமாக நாளை (நவ.22) புதிதாக பணியில் சேர உள்ள 71,000 பேருக்கு பணி ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்க உள்ளார். மேலும், பணி ஆணைய பெற்றவர்களுடன் பிரதமர் உரையாற்றுகிறார். சென்னை உட்பட நாடு முழுவதும் 45 இடங்களில் புதிய பணி ஆணைகளை நேரடியாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மேலும், புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வகுப்புகளையும் பிரதமர் தொடங்கிவைக்கிறார். ஆன்லைன் மூலம் இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. அரசு பணியாளர்களுக்கான நடத்தை விதிமுறைகள், பணியிட விதிகள் மற்றும் மரபுகள், நேர்மை, மனித வள கொள்கைகள், இதர பயன்கள் மற்றும் படிகள் ஆகியவை இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதைத் தவிர்த்து, ஏற்கெனவே பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் தவிர ஆசிரியர்கள், செவிலியர்கள், விரிவுரையாளர்கள், செவிலி அதிகாரிகள், மருத்துவர்கள், மருந்தாளர்கள், ரேடியோ கிராபர்கள், துணை மருத்துவம் மற்றும் இதர தொழில்நுட்ப பணிகளுக்கும் புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உட்பட்ட பல்வேறு மத்திய ஆயுதப் போலீஸ்படைப்பிரிவுகளில் கணிசமான எண்ணிக்கையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.