FIFA World Cup 2022: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கலக்கும் நாமக்கல் முட்டை

FIFA World Cup 2022: கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி காரணமாக அங்கு முட்டையின் தேவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. எனவே நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் அளவு 1.50 கோடியாக அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 1000-க்கு மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதன்படி மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு மாதத்திற்கு 2 கோடி முட்டைகள் வீதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் கத்தாருக்கு அதிகளவிலான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது கத்தார் நாட்டில் உலக கால்பந்துப் போட்டி நடைபெறுகிறது. இதனால் போட்டியில் பங்கேற்கும் நாடுகள் உள்பட உலகம் முழுவதும் இருந்து போட்டியைக் காண பல லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளது.

இதன்படி மாதந்தோறும் கத்தாருக்கு மட்டும் நாமக்கல்லில் இருந்து 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு அதிகமாக 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல்லை சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர் அப்துல்ரகுமான் கூறுகையில், “நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் முட்டை ஏற்றுமதியாகும் நாடுகளில் கத்தாரும் ஒன்று. தற்போது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தாரில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் அளவு கடந்த ஒரு மாதத்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

Namakkal Egg

நாமக்கல்லில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், கத்தார், பஹ்ரைன் மற்றும் மாலத்தீவுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல்லில் உற்பத்தியாகும் முட்டைகளில் இருந்து மாதந்தோறும் சுமார் 2 கோடி முட்டைகள் இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் அளவு 4 கோடியாக அதிகரித்துள்ளது. 

இதில் மாதந்தோறும் கத்தாருக்கு மட்டும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது கத்தாருக்கு மாதம் ஒன்றிற்கு 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாதம் ஒன்றுக்கு 10 கன்டெய்னர்கள் மூலம் கத்தாருக்கு முட்டைகள் அனுப்பப்பட்டன. தற்போது 30 கன்டெய்னர்கள் அனுப்பப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.