கால்பந்து உலகக்கோப்பையை நடத்தும் நாடு இதுவரை தொடரின் முதல் போட்டியில் தோற்றதே இல்லை. ஆனால், இந்த கத்தார் அந்த சாதனையை முறியடித்திருக்கிறது.
போட்டியை நடத்தும் நாடாக இருந்துகொண்டு முதல் போட்டியிலேயே ஈக்குவேடாருக்கு எதிராக 2-0 என தோற்றிருக்கிறது. ஈக்குவேடார் அணியின் கேப்டனான என்னர் வெலன்சியாதான் ஹீரோ ஆஃப் தி மேட்ச் ஆக இருந்தார். ஈக்குவேடாருக்கான இரண்டு கோல்களையுமே வெலன்சியாதான் அடித்திருந்தார்.
வெலன்சியா பிரேஸ் மட்டுமில்லை. ஹாட்ரிக்கும் அடித்திருக்க வேண்டும். ஆனால், நடுவர்களின் சர்ச்சையான முடிவால் அது நடக்காமல் போனது. உலகக்கோப்பையே விவாதத்தை கிளப்பும் வகையிலான ஒரு முடிவோடுதான் தொடங்கியிருக்கிறது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே ஈக்குவேடாருக்கு ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்திருந்தது. இதை சரியாக பயன்படுத்தி கத்தார் கோல் கீப்பரின் கவனக்குறைவை சாதகமாக்கி வெலன்சியா மூன்றாவது நிமிடத்திலேயே ஒரு கோலை போட்டார். கோலும் வழங்கப்பட்டது. ஆனால், பின்னர் VAR மூலம் பரிசோதித்த போது இந்த கோல் ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. ஃப்ரீ கிக் மூலம் பந்து உதைக்கப்பட்ட சமயத்தில் ஈக்குவேடார் வீரர் ஒருவரின் கால் மட்டும் கத்தார் அணியின் கடைசிக்கு முந்தைய டிஃபண்டரை தாண்டி இருந்தது. அதனாலயே கோல் வழங்கப்படாமல் ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது.
கோல் இல்லையென்றாலும் ஈக்குவேடார் ஓய்ந்து விடவில்லை. தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டே இருந்தனர். Ball Possession முழுவதும் ஈக்குவேடாரிடமே இருந்தது. ஆட்டத்தை முழுமையாக ஈக்குவேடாரே கட்டுப்படுத்தியது. கத்தார் கடுமையாக திணறியது. 16 வது நிமிடத்தில் ஈக்குவேடார் முதல் கோலை அடித்தது. அதை அடித்துக் கொடுத்ததும் வெலன்சியாதான். பாக்ஸூக்குள் ஒரு பெனால்டியை சம்பாதித்து அதை கோலாகவும் மாற்றிக் காட்டினார்.
எந்த அழுத்தமும் இல்லாமல் பெரிதாக எதையும் முயற்சிக்காமல் லாவகமாக கத்தாரின் கீப்பரை இடப்பக்கம் பாய வைத்து வலப்பக்கத்தில் வலைக்குள் தள்ளினார். இந்த உலகக்கோப்பையின் முதல் கோலை அடித்தவர் எனும் பெருமையையும் பெற்றார்.
இந்த கோலுக்கு பிறகும் கத்தார் சுதாரித்துக் கொள்ளவில்லை. பெரிதாக அட்டாக் செய்யவே முயற்சிக்கவில்லை. ஈக்குவேடாரை ஸ்கோர் செய்யவிடாமல் தடுத்தாலே போதும் என்கிற மனநிலையிலேயே ஆடினர். ஆனால், அதை கூட அவர்களால் சரியாக செய்ய முடியவில்லை. 30 வது நிமிடத்திலேயே மீண்டும் ஒரு கோலை ஈக்குவேடார் அடித்தது. இதுவும் வெலன்சியாலே அடிக்கப்பட்டது. ஒரு க்ராஸை அட்டகாசமாக ஹெட்டர் செய்து வெலன்சியா கோலாக்கியிருந்தார். 2-0 என ஈக்குவேடார் முன்னிலை பெற்றது. கடைசி வரைக்குமே கத்தாரால் ஒரு கோலை கூட அடிக்க முடியவில்லை. ஈக்குவேடார் முதல் போட்டியையே வென்றது. போட்டியை நடத்தும் நாடாக இருந்து கொண்டு கத்தார் முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவியது.
யார் இந்த வெலன்சியா?
கத்தாரின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் வெலன்சியாவே. வெலன்சியாவின் நேர்த்தியான ஃபினிஷ்களாலே ஈக்குவேடாரிடம் கத்தார் வீழ்ந்தது. வெலன்சியாவிற்கு 33 வயதாகிறது. ஈக்குவேடார் அணிக்காக அதிக கோல்களை அடித்திருக்கும் வீரர் அவரே. 37 கோல்களை அடித்திருக்கிறார். இதுவரை 4 உலகக்கோப்பைகளில் ஈக்குவேடார் ஆடியிருக்கிறது. ஈக்குவேடாருக்காக உலகக்கோப்பையில் அதிக கோல்களை அடித்திருக்கும் வீரரும் வெலன்சியாதான். 5 கோல்களை அடித்திருக்கிறார். 2014 பிரேசில் உலகக்கோப்பையில் 3 கோல்களை அடித்திருந்தார். 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த உலகக்கோப்பைக்கு வந்து இங்கேயும் முதல் போட்டியிலேயே Brace அடித்திருக்கிறார். வெஸ்ட் ஹாம், எவர்டன் போன்ற க்ளப்களுக்கும் ஆடியிருக்கிறார். சமீபமாக டர்க்கீஸ் லீகில் ஃபெனர்பாஜி அணிக்காக சிறப்பாக ஆடி வந்தார். ஒரே சீசனில் 13 கோல்களை அடித்திருந்தார். அதே ஃபார்மை இங்கேயும் தொடர்ந்திருக்கிறார்.
இந்த போட்டியின் 77 வது நிமிடத்தில் வெலன்சியா காயம் காரணமாக வெளியேறியிருந்தார். அடுத்த போட்டிக்குள் அவர் மீண்டு வந்துவிட வேண்டும் என்பதே ஈக்குவேடார் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.