தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் நாளை பிற்பகல் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சுமார் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்துள்ளது. சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களையும் நடத்தியது.
மேலும், திமுக அமைச்சர்களின் ஊழல் குறித்தும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் அவ்வப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வருகின்றனர். இதற்கு திமுக அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை கண்டித்தும், திமுக அரசில் சட்டம் – ஒழுங்கு சீர் கெட்டு விட்டதாகவும் அடிக்கடி அறிக்கை வாயிலாக தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை மதியம் 12:45 மணி அளவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல்களை, ஆளுநரிடம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க, எடப்பாடி பழனிசாமி உடன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் செல்ல உள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை, ஏற்கனவே, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சரிவர செயல்படவில்லை என்ற பேச்சு எழுந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கை, ரத்தத்தின் ரத்தங்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.