கத்தார்: கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவடைந்ததும் ஜப்பானியர்கள் பலர் மைதானத்தில் இருந்த குப்பைகளை அகற்றும் வீடியோ வைரலாகியுள்ளது. இதே பாணியை பின்பற்றி மற்றவர்களும் பொதுஇடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கத்தாரில் ‛பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் 22வது சீசன் நடக்கிறது. நேற்றைய ‛ஏ’ பிரிவு போட்டியில் கத்தார் – ஈகுவடார் அணிகள் மோதின. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணி வெற்றி பெற்றது. போட்டி முடிவடைந்ததும் மைதானத்தை விட்டு ரசிகர்கள் கிளம்பினாலும் ஜப்பானை சேர்ந்த ரசிகர்கள் செய்த செயல் வைரலாகி உள்ளது.
போட்டியின்போது ரசிகர்கள் கொண்டுவந்த பதாகைகள், உணவு தட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் என குப்பையில் போட வேண்டிய பொருட்களை அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர். அதனை பார்த்த ஜப்பான் ரசிகர்கள், மைதானத்தில் கிடந்த தண்ணீர் பாட்டில்கள், சாப்பிட்டு விட்டுச்சென்ற உணவுப்பொருட்கள் மற்றும் குப்பைகளை அகற்றினர். ஜப்பானியர்களின் இந்த செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
போட்டியில் ஜப்பான் விளையாடவில்லை என்றாலும் போட்டியை ரசிக்க வந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க அவர்கள் உதவியதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது. வீடியோவில் ஜப்பான் ரசிகர் ஒருவரிடம், ‛இதை ஏன் செய்கிறீர்கள்’ என்ற கேள்விக்கு அந்த ரசிகர், ‛நாங்கள் ஜப்பானியர்கள். இந்த இடத்தை மதிக்கிறோம்; எங்கள் பின்னால் இருக்கும் குப்பைகளை அகற்றுவதே எங்கள் கடமை’ என பதிலளிக்கிறார்.
இது இப்படி இருக்க இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் விளையாட்டு மைதானங்கள் மட்டுமல்லாது பொது இடங்களிலும் மக்கள் குப்பையை போட்டுவிட்டு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். தாங்கள் வசிக்கும் அல்லது பணிபுரியும் இடங்களின் சுற்றுப்புற சூழலைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது. இந்த வழக்கம் முடிவில் சுகாதார கேட்டையும் நோய்களையும் தான் பரப்புகிறது.
போட்டியை ரசித்த மைதானத்தையோ, இருக்கும் பொதுஇடத்தையோ சுத்தமாக வைத்திருப்பது ஜப்பானியர்கள் சொன்னது போல், ஒவ்வொரு ரசிகரின் கடமை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்..
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement