புதுடெல்லி: காது கேட்கும் கருவி பொருத்தியவுடன் கேட்கும் சக்தியை பெற்ற குழந்தை புன்னகைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் காது கேளாதவர்கள் மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறன் குழந்தைகள், சிறார்கள் 40 லட்சம் பேர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததால், அவர்களின் வாழ்க்கை முழுவதும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து மீள்வதற்கு ஏராளமான மருத்துவ வசதிகளும், சாதனங்களும் வந்துள்ளன. அவற்றை முறையாக பயன்படுத்தினால் காது கேளாமையிலிருந்து குழந்தைகளை விடுவிக்க முடியும். இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கண்கவர் வீடியோவை சமூக ஊடக தளமான டுவிட்டரில் @Gulzar_sahab என்ற ஐடியில் பகிரப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், பிறப்பிலிருந்தே காது கேளாமையால் அவதிப்பட்டு வந்த பெண் குழந்தைக்கு காது கேட்கும் கருவி பொருத்தப்படுகிறது. பெண் ஒருவரின் மடியில் அமர்ந்திருக்கும் அந்த குழந்தை, காது கேட்கும் கருவியை பொருத்தும் போது அழுகிறது. எப்படியோ போராடி, அந்த குழந்தைக்கு மருத்துவர் காது கேட்கும் கருவியை பொருத்துகிறார். தொடர்ந்து குழந்தையை மடியில் வைத்திருந்த பெண், அந்த குழந்தையிடம் பேசினார். அந்த குரலைக் கேட்டதும் அந்த குழந்தையின் முகத்தில் அற்புதமான சிரிப்பு தோன்றியது. குழந்தையின் முகத்தில் ஏற்பட்ட புன்னகை குறித்து, சமூக வலைதளங்களில் பலரும் உணர்ச்சிபூர்வமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 51 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கான பயனர்கள் பார்த்துள்ளனர். நூற்றுக்கணக்கான பயனர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.