கோவை | மூட்டைப்பூச்சியால் பயணிக்கு பாதிப்பு: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு அபராதம்

கோவை: பயணத்தின்போது மூட்டைப்பூச்சி கடித்து பாதிக்கப்பட்ட பயணிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மருதமலையைச் சேர்ந்த எஸ்.பாபு, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: ராஜபாளையத்திலிருந்து கோவை வருவதற்காக 2018 டிசம்பர் 27-ம் தேதி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்இடிசி) இணையதளத்தில் முன்பதிவு செய்தேன். அப்போது, அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் பயணிக்க கட்டணமாக ரூ.355 செலுத்தினேன். 2019 ஜனவரி 2-ம் தேதி இரவு அந்த பேருந்தில் பயணித்தேன்.

அப்போது, மூட்டைப்பூச்சி, கரப்பான் பூச்சி, வண்டு போன்ற பூச்சிகள் கடித்ததால் உடலில் தடிமனான வீக்கங்களும், உடல் எரிச்சலும் ஏற்பட்டது. இதனால், பயண நேரம் முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டேன். இதுகுறித்து பேருந்து நடத்துனரிடம் புகார் தெரிவித்தபோது, அவர் அலட்சியமாக பதில் அளித்தார். கோவை வந்தவுடன் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் காண்பித்தேன். என்னை பரிசோதித்த மருத்துவர், நாள்பட்ட அழுக்கில் உள்ள மூட்டைப்பூச்சி, வண்டுகள் போன்ற பூச்சிகள் கடித்ததால் உடலில் இதுபோன்ற ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர், மருத்துவமனையில் மருந்துகள், களிம்புகளை அளித்தனர். அதன்பின்னரும் உடம்பில் ஏற்பட்ட வீக்கம், எரிச்சல் இருந்ததால் மருத்துவரின் ஆலோசனைப்படி கடையில் மருந்து வாங்கி உபயோகித்தேன். இதற்கு ரூ.1,257 செலவானது. எனவே, மருத்துவ செலவை வழங்கவும், சேவை குறைபாட்டால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்கவும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.தங்கவேல், உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஜி.சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ”அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சேவையில் குறைபாடு இருந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பயண கட்டணமாக மனுதாரர் செலுத்திய ரூ.355-ஐ திருப்பி அளிக்க வேண்டும். அதோடு, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.5,000, வழக்குச் செலவாக ரூ.3,000-ஐ எஸ்இடிசி அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.