சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் யார் தெரியுமா? – தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின்.

பண மோசடி வழக்கில், சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை, கடந்த மே மாதம் 30 ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர், தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கோரி டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தாக்கல் செய்த மனுக்களை இரு முறை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சிறையில் சத்யேந்திர ஜெயின் மசாஜ் செய்து கொள்ளும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் உள்ளன.

இது குறித்து விளக்கம் அளித்த டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில், சத்யேந்திர ஜெயினுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும், சிறையில் அவருக்கு சகல வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் பிசியோதெரபிஸ்ட் அல்ல என்றும் அவர் பலாத்கார வழக்கு ஒன்றில் கைதியாக சிறையில் உள்ளவர் என்றும் திகார் சிறை வட்டாரம் தெரிவித்து உள்ளது. ஜேபி கல்யாண் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் சிறை கைதியாக அந்த நபர் உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனது 10 வயது மகளை பாலியல் தொல்லை அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக நிர்வாகிகள் கூறுகையில், சத்யேந்திர ஜெயின் இன்னும் ஒரு நிமிடம் கூட அமைச்சராக இருக்கக் கூடாது. அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்திர ஜெயினை பதவி நீக்கம் செய்ய முடியாத அளவுக்கு பலவீனமாக இருந்தால், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நாட்டு மக்களிடம் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினர்.

டெல்லி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் டெல்லி சிறைச்சாலைகள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.