“வீர் சாவர்க்கர் விவகாரத்தில் சமரசம் கிடையாது. நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைத்துள்ளோம்,” என, சிவசேனா கட்சி மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள், மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன.
சுமார் இரண்டரை ஆண்டுகள் கூட்டணி ஆட்சி தொடர்ந்த நிலையில், சிவசேனா மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அடுத்து, மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து பாஜக உதவியுடன், ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளார்.
இதற்கிடையே, பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலத்தில் செய்திாளர்களிடம், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பேசுகையில், வீர் சாவர்க்கர் குறித்து கருத்துத் தெரிவித்து இருந்தார். இந்தக் கருத்துக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இது குறித்து பேசிய உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தியின் கருத்தை ஏற்க முடியாது என வெளிப்படையாகத் தெரிவித்தார். இதன் காரணமாக, காங்கிரஸ் – சிவசேனா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. மேலும், கூட்டணியில் இருந்து சிவசேனா எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என்றும் தகவல் பரவியது.
இந்நிலையில் இன்று, ஆங்கில தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு, சிவசேனா கட்சி மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில் கூறியதாவது:
வீர் சாவர்க்கர் அந்தமான் சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்தார். அந்த சிறை எப்படி இருக்கும் என்பது அங்கிருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். வீர் சாவர்க்கர், நேரு, நேதாஜி சுபாஷ் போஸ் என யாராக இருந்தாலும் சரி, வரலாற்றைத் திரிப்பது சரியல்ல.
ராகுல் காந்தி பற்றி நாங்கள் எதையும் விவாதிக்க மாட்டோம். அவர்களுடன் நாங்கள் உடன்பட மாட்டோம். ஆனால் ஒரு கூட்டணி சமரசத்தில் இயங்குகிறது. கூட்டணி எப்போதும் சமரசம் தான். சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். ஒவ்வொரு விஷயத்திலும் நாங்கள் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் இந்துத்துவா விஷயங்களிலும், சாவர்க்கரிலும் சமரசம் செய்ய மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.