மும்பை: “சத்ரபதி சிவாஜி மகாராஜாவைப் பற்றி பேசியதன் மூலம் மகாராஷ்டிகாரவில் ஆளுநர் பதவிக்கான கண்ணியம் முடிவுக்கு வந்துவிட்டது” என்று மகாராஷ்டிரா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் காட்டமாக விமர்சித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் அளித்த பேட்டி ஒன்றில், “நாங்கள் அவரை (பகத்சிங் கோஷ்யாரி) ஆளுநராக கருத தயாராக இல்லை. அவர் பாஜகவின் பணிவான தொண்டர். ஆளுநர் என்பவர் நடுநிலையோடு இருக்க வேண்டும். தன்னுடைய வார்த்தைகளிலும், நடத்தைகளிலும் கண்ணியம் காக்க வேண்டும். எங்களுடைய ஆளுநரோ சத்ரபதி சிவாஜி மகாராஜா, மகாத்மா பூலே, சாவித்ரிபாய் பூலே பற்றி பேசுகிறார். மகாராஷ்டிரா குறித்து கேலி செய்கிறார்.
வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு ஆளுநர் மீது மக்கள் கோபத்தில் இருந்தது இல்லை. அந்த அளவுக்கு மக்கள் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் ஆளுநர் பதவிக்கான கண்ணியம் என்பதே முடிவுக்கு வந்துவிட்டது. ஏனென்றால் ராஜ் பவனை பாஜக தன்னுடைய கட்சித் தலைமை அலுவலகமாக மாற்றிவிட்டது. ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும் நாங்கள் மட்டும் விரும்பவில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்களும் அதனையே விருப்புகின்றனர். ஆனால் அதனை வெளிப்படையாக சொல்வதில்லை” என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
சத்ரபதி சிவாஜி குறித்த ஆளுநரின் கருத்து வெளியான மூன்று நாட்கள் கழித்து மகாராஷ்டிராவில் ஆளும் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏ ஒருவர், ஆளுநருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். ஷிண்டே அணி சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட், ‘ஆளுநரை வேறு மாநிலத்திற்கு மாற்றுங்கள். மகாராஷ்டிராவின் அடையாளமான சத்ரபதி சிவாஜி மகாராஜா எப்போதும் வழக்கொழிந்து போகமாட்டார். அவரை உலகின் வேறு எந்த தலைவருடனும் ஒப்பிட முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சனிக்கிழமை பேசிய மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, “சத்ரபதி சிவாஜி கடந்த கால சகாப்தத்தின் தலைவர். மகாராஷ்டிரா தங்களுடைய நிகழ்கால தலைவர்களாக டாக்டர். பாபாசகேப் அம்பேத்கர், நிதின் கட்கரி போன்றவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.