டிபிஐ அலுவலகத்தில் க.அன்பழகனுக்கு சிலை: எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக!

பள்ளி கல்வி துறை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் க. அன்பழகனுக்கு சிலை அமைப்பதை திமுக அரசு கைவிட வேண்டும் என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

தமிழக கல்வித்துறையில் முன்னாள் அமைச்சர் க.அன்பழகனின் பணி அளப்பரியது. பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்கள் இயங்கும் சாலையில், டிபிஐ வளாகத்தில் க.அன்பழகனுக்கு தமிழக அரசு சிலை அமைக்க உள்ளது.

முன்னதாக 2021 சட்டபேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், சென்னை நந்தனத்தில் உள்ள நிதித்துறையின் பெரிய கட்டிடத்திற்கு, முன்னாள் நிதி அமைச்சர் க.அன்பழகனின் பெயர் சூட்டப்படும் என அறிவித்திருந்தார்.

க.அன்பழகனின் பிறந்த தின நூற்றாண்டு தொடங்கியதை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்ட அவரது சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி திறந்துவைத்தார். மேலும், சிலை அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகக் கட்டடத்துக்கு ‘க.அன்பழகன் மாளிகை’ என்ற பெயர் சூட்டினார்.

அதேபோல் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளை நவீனமயமாக்குவதற்காக பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்தது. அரசுப்பள்ளிகளில் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டு, 18ஆயிரம் புதியவகுப்பறைகள் கட்டப்படும். ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகங்கள், இந்த திட்டங்கள் ரூ.7ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் ரூ.1300 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது.

இது ஒருபுறமிருக்க டிபிஐ வளாகத்தில் க.அன்பழகனுக்கு தமிழக அரசு சிலை அமைக்க நாராயணன் திருப்பதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்கள் இயங்கும் சாலையில், டிபிஐ வளாகத்தில் முன்னாள் கல்வி அமைச்சரும், திமுகவின் தலைவர்களில் ஒருவருமான அன்பழகனுக்கு சிலை நிறுவும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

”2013 உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் பொது இடங்களில் எந்த சிலை நிறுவவும் தமிழகம் அனுமதியளிக்கவில்லை” என்று கடந்த 23.1.2022 என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றில் தலைமைச் செயலாளர் இறையன்பு தமிழக அரசின் சார்பில் வாக்குமூலத்தை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சாலைகளிலோ, நடைபாதைகளிலோ, பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள பொது இடங்களிலோ இனி சிலைகள் வைப்பதற்கு மாநிலங்கள் அனுமதியளிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஜனவரி 18, 2013 அன்று அளித்த தீர்ப்பின்படி, அரசு அலுவலகங்கள் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள இடங்கள் என்பதை உணர்ந்து, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கல்வித்துறை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் சிலையை நிறுவும் முயற்சியினை தமிழக அரசு கைவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.