புதுடெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவருக்கு மசாஜ் செய்தவர் ஒரு கைதி என்றும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்தர் ஜெயின். இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.47 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக சிபிஐ கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. போலி நிறுவனங்கள் பலவற்றை நடத்தி அதன்மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட சத்யேந்தர் ஜெயின் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சிறையில் சத்யேந்தர் ஜெயின் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கின் சாட்சியங்களை சந்தித்துப் பேசுவதாகவும் தெரிவித்தது. இது தொடர்பாக டெல்லி தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், திகார் சிறையில் சத்யேந்தர் ஜெயின் தங்கியிருந்த அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் கடந்த செப்டம்பர் 13, 14, 21 ஆகிய தேதிகளில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் தற்போது பரவி வருகிறது. அதில் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்துவிடுகிறார். மற்ற 3 பேர் சத்யேந்தர் ஜெயினுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ வெளியானதை அடுத்து 12 அதிகாரிகள் திகார் சிறையில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், அது மசாஜ் அல்ல என்றும் பிசியோதெரபி சிகிச்சை என்றும் விளக்கம் அளித்தார். சத்யேந்தர் ஜெயினுக்கு முதுகுத்தண்டில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு, சிறையில் நடக்கும் பிசியோதெரபி அமர்வில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், திகார் சிறைத்துறை மூலம் இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் ரிங்கு என்ற கைதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10வது படிக்கும் தனது சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறையில் பிசியோதெரபி அமர்வு என்று எதுவும் நடத்தப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளியானதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, “இனி ஒரு நிமிடம்கூட சத்யேந்தர் ஜெயின் அமைச்சராக தொடரக்கூடாது என வலியுறுத்தினார். சத்யேந்தர் ஜெயினை பதவி நீக்கம் செய்ய முடியாத அளவுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் பலவீனமாக இருந்தால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சத்யேந்தர் ஜெயின் பிசியோதெரபி சிகிச்சை பெற்றதாக பொய் கூறியதற்காக அரவிந்த் கேஜ்ரிவால் மன்னிப்பு கோர வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.