தமிழக கோயில்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் – அமைச்சர் சேகர் பாபு

இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டம் நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் இவ்வாறு பேசினார்.

திருவண்ணாமலை தீபத் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் அங்கு என்னென்ன முன்னேற்பாடுகள் நடந்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அங்குள்ள நான்கு கோபுரங்களையும் சுத்தம் செய்துள்ளோம். 30 லட்சம் பக்தர்கள் வருவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்கவும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு வர கூடுதலாக 2000 பேருந்துகளை இயக்க முதல்வரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என கூறினார்.

இதனை அடுத்து கோயில் கருவறைக்குள் விஐபி தரிசனம் நடப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எந்த கோயில் கருவறையிலும் பக்தர்கள் சென்று பூஜை செய்ய அனுமதி கிடையாது. அது தவறான குற்றசாட்டு. எந்த கோயிலில் அவ்வாறு நடந்தது என்று ஆதாரத்துடன் கேள்வி கேளுங்கள் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார். மேலும், விஐபி தரிசனம் என்பது காலம்காலமாக இருந்து வருகிறது. அதை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது.

உதாரணமாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 20 ரூபாய் கட்டணத்தில் தரிசனம் இருந்தது. அதனால், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்தபோதிலும் அந்த கட்டண முறையை நாங்கள் ரத்து செய்துள்ளோம். அதுபோல நாளடைவில் எங்கெல்லாம் சாத்தியக்கூறுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் படிப்படியாக தடுக்க இந்து சமய அறநிலையத்துறை முயற்சித்து வருகிறது. திருக்கோயிலில் அனைவரும் சமம். சில இடங்களில் கோயிலில் தங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

அதை இந்த ஆட்சியில் ஒழித்துள்ளோம். திருக்கோயில்களில் யார் வேண்டுமானாலும் தங்கலாம். தமிழகத்தில் உள்ள கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும். கோயில்களில் அனைவரும் சமம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.