திருவாரூர்: தாலிகட்டும் நேரத்தில் சைல்டுலைனுக்கு அழைத்து தன் திருமணத்தை நிறுத்திய சிறுமியின் துணிவு!

திருவாரூர் மாவட்டத்தில், ஒரு பெற்றோர் திருமண வயதை அடையாத நிலையில் தங்கள் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். உறவினர்கள் கூடியிருக்க, மணமேடையில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் கழுத்தில் கிடந்த மாலையை கழட்டி வீசிய சிறுமி, `எனக்குத் தாலி கட்டாதே…’ எனக் கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முத்துப்பேட்டையில் திருமணத்தை நிறுத்திய சிறுமி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவருக்கு, அவரின் பெற்றோர் திருமணத்திற்காக பெண் பார்த்துள்ளனர். இந்த நிலையில் அவர்களது உறவுக்கார குடும்பம் ஒன்றில் பெண் கேட்டுள்ளனர். ஜாதகப் பொருத்தம் உள்ளிட்டவை சரியாக அமைந்ததால் திருமணத்திற்கான பேச்சு வார்த்தை இரு வீட்டிலும் தொடங்கியது.

17 வயதே ஆன சிறுமிக்கு திருமணத்திற்கான ஏற்பாடு தடபுடலாக நடந்தது. இதில் சிறுமிக்கு விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. ஆனாலும் அழைப்பிதழ் அச்சடித்து சொந்த, பந்தங்கள் என பலருக்கும் இருதரப்பு பெற்றோரும் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், திருமணத்தன்று காலையிலேயே உறவினர்கள் மண்டபத்தில் கூடியிருக்க, உற்சாகம் களைகட்டியது. அறுசுவை உணவு தயாராக இருக்க, புரோகிதர் மந்திரங்கள் ஓத, மணமகன் மேடையில் அமர்ந்திருந்தார். மணப்பெண் கோலத்தில் சிறுமி மணமகன் அருகே அமரவைக்கப்பட்டார்.

திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்த பிறகு, புரோகிதர் தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுத்தார். மணமகன் தாலி கட்டுவதற்குச் செல்ல, அதுவரை அமைதியாக இருந்த சிறுமி முகம் சிவக்க, `தாலி கட்டாதே… நிறுத்து…!’ எனக் கத்தியவாறே மணமேடையில் இருந்து எழுந்தார். கழுத்தில் கிடந்த மாலையை கழட்டி வீசினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மணமகன் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

குழந்தைத் திருமணம்
மாதிரி படம்

உறவினர்கள், `என்னம்மா ஆச்சு, ஏன் அப்படி சொல்ற?’ என்று கேட்க, `எனக்கு இந்தத்திருமணம் பிடிக்கலை’ என்று சொல்லிக் கொண்டே தன்னிடமிருந்த செல்போனை எடுத்து, சைல்டு லைன் அமைப்பினரை தொடர்பு கொண்டுள்ளார் சிறுமி. `எனக்குத் திருமண வயது ஆகவில்லை. எனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆனாலும் என் பெற்றோர் எனக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். என்னை காப்பாற்றுங்கள்’ எனக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து உடனடியாக மண்டபத்துக்கு வந்த சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் போலீஸார், மைனரான பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி தவறு என அவரின் பெற்றோர் உள்ளிட்டவர்களிடம் எடுத்துக் கூறியதுடன் சிறுமியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சிலரிடம் பேசினோம். “திருமணத்தில் விருப்பம் இல்லாத நிலையில் சிறுமியான அந்தப் பெண்ணுக்குத் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். அவர் தன் பெற்றோரிடம், தனக்கு இப்போது திருமணம் வேண்டாம், பிடிக்கவில்லை என்று கூறி வந்துள்ளார். ஆனாலும் அதனை காதில் வாங்காத சிறுமியின் பெற்றோர், நிச்சயதார்த்தம் செய்ததுடன் திருமணத்துக்காக நாள் குறித்துள்ளனர்.

அதன் பிறகும் தனக்கு திருமணம் வேண்டாம் எனத் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார் சிறுமி. இந்த நிலையில், திருமணத்தன்று தாலி கட்டும் நேரத்தில் மணமேடையிலேயே திருமணத்தை நிறுத்திவிட்டார். பெற்றோர் தங்கள் மகள் கூறியதை கேட்டிருந்தால் இந்த நிலை ஏற்ப்பட்டிருக்காது.

சைல்டு லைன் 1098

இதனை தொடர்ந்து மணமகன் வீட்டார், `உங்க மகள் செயலால் நாங்க வெளியே தலைகாட்ட முடியாத நிலைக்கு ஆளாகிட்டோம். திருமணத்திற்காக நிறைய செலவு செய்துட்டோம். அந்தப் பணத்தை கொடுக்க வேண்டும்’ என மண்டபத்திலேயே கேட்டுள்ளனர். இருதரப்பு உறவினர்களும் பேச்சு நடத்தி, முடிவில் மணமகள் பெற்றோர், மணமகன் வீட்டாருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்ததாகத் தெரிகிறது’’ என்றனர்.

சினிமாவில் நடப்பது போல் நடந்த இந்த சம்பவத்தை, மக்கள் ஆச்சர்யத்துடனும், சிறுமியைப் பாராட்டியும் பேசி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.