பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சிக்கு கலங்கம் விளைவித்ததாக கூறி பாஜகவில் இருந்து ஆறு மாத காலம் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர், என்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் என்னை கட்சியை விட்டு நீக்கி உள்ளனர். நான் பாஜகவிற்கு களங்கம் விளைவிப்பதாக கூறுகின்றனர். இது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. பாஜகவிற்கு நான் எதிரானவள் என அண்ணாமலை கூறினால் அவரையும் நான் எதிர்ப்பேன் எனத் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் மத்தியில் காயத்ரி ரகுராம் பேசிய முழுவிவரம்:
5 பைசா ஆதாயம் இல்லாமல் கடன் வாங்கி மக்களுக்கு உதவி செய்தேன். 8 வருடமாக கட்சிக்கு உழைத்து உள்ளேன். உண்மையை பேசியதால். என்னை கட்சியை விட்டு நீக்கி உள்ளர்கள். நான் பாஜக விற்கு களங்கம் விளைவித்ததாக கூறுவது தவறு. எனது கருத்துக்களை கேட்காமலே கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர் என்றார். என்னிடம் எந்த விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. என் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எந்த விளக்கமும் தரவில்லை என்றார்.
கலாச்சார பிரிவு தலைவராக இருந்தபோதே என்னை திட்டமிட்டு அப்பதவிலிருந்து விளக்கினார். ஏற்கனவே நான் பெப்சி சிவா மீது புகார் அளித்த போது என்னை தான் பதவியில் இருந்து நீக்கினர். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜக அறிவிசார் பிரிவு நிர்வாகி செல்வகுமார் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி கருத்துக்களை பதிவிட்டதால் நான் எனது கருத்தை பதிவிட்டேன். என்னை அடித்தால் நான் திருப்பி அடிக்கும் கேரக்டர் என்றார்.
நான் பாஜகவிற்கு எதிராக இருப்பதாக யார் கூறினாலும் அவர்களுக்கு நான் எதிரானவள். அண்ணாமலை அந்த கருத்தை தெரிவித்தால் அவரையும் நான் எதிர்ப்பேன் என்றார். காசி தமிழ்சங்கத்தில் கலந்து கொள்ளாதது மிகப்பெரிய வருத்தம் அளித்தது. அதற்கான ஆலோசனைக் கூட்டங்களில் என்னை புறக்கணித்தனர் என்றார்.
தற்போது சூர்யா சிவா பெண் நிர்வாகியிடம் பேசியது சைதை சாதிக் பேசியதைவிட மோசமானது. சூர்யா சிவாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும். தமிழக முதல்வர் அவர்கள், சூரியா சிவா மீது கைது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். நான் கண்டிப்பாக பாஜகவில் தான் தொடர்ந்து இருப்பேன். யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. என்மீது குற்றம் இல்லை என்பது தான் உண்மை என்றார்.பாலியல் குற்றம் எல்லா கட்சியிலும் நடக்கிறது. எல்லா குற்றத்திற்கும் எதிராக செயல்பட வேண்டும். பாலியல் குற்றசாட்டிற்கு காரணமாக சொந்த மகன் இருந்தால் கூட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்தலில் நிற்க இருப்பது குறித்த கேள்விக்கு, கட்சியில் எது வேண்டுமானாலும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். முட்டி மோதி தான் என்னுடைய இந்த இடத்தை நான் அடைந்திருக்கிறேன் என்றார்.