காஜியாபாத்: நோயாளிக்கு சிகிச்சை அளித்ததில் அலட்சியம் காட்டியதாக கூறி ஓராண்டுக்கு பின்னர் 5 மருத்துவர்கள் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக நொய்டா பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த காலகட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மருந்துகள் கிடைப்பது அரிதாக இருந்தது. குறிப்பாக ரெம்டெசிவர் என்ற மருந்து கிடைப்பது பெரும் சவாலாக இருந்தது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அவரது குடும்பத்தினர் தரப்பில் வெளிமார்க்கெட்டில் ரெம்டெசிவர் மருந்து வாங்கித் தரப்பட்டது. ஆனால், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவினர் உரிய நேரத்தில் ரெம்டெசிவர் மருந்தை கொடுக்காததால், அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக குடும்பத்தினர் தரப்பில் நொய்டா காவல் நிலையத்திலும், கவுதம் புத் நகர் தலைமை மருத்துவ அதிகாரி (சிஎம்ஓ) திகம் சிங் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது.
கிட்டதட்ட ஓராண்டுக்கு பின்னர், தனியார் மருத்துவமனையின் 5 மருத்துவர்கள் மீது ஐபிசியின் பிரிவு 304ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து நொய்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் பரம்ஹன்ஸ் திவாரி கூறுகையில், ‘புகார் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தனியார் மருத்துவமனையின் 5 மருத்துவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார். மேற்கண்ட வழக்குபதிவு குறித்து தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கபில் தியாகி கூறுகையில், ‘நோயாளி மிகவும் ஆபத்தான நிலையில் எங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். எங்களிடம் சிகிச்சை பார்த்த அவர்கள், பின்னர் டெல்லியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எங்களது மருத்துவ சிகிச்சையில் தவறில்லை’ என்றனர்.