சேலத்தில் டாஸ்மாக் பணியாளரிடம் ராஜா என்பவர் பணம் கேட்டு பேசும் ஆடியோ ஒன்று அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் பணியாளரிடம் ராஜா என்பவர், “ஜம்பு அண்ணன் பேசியிருப்பார்னு நினைக்கிறேன். நம்ம கடைக்குத்தான் வந்து கொண்டிருக்கிறேன்” என்கிறார். அதற்கு பணியாளர், “நீங்க யார் சார்” என கேட்கவே, “என் பெயர் ராஜா” என்று குறிப்பிடுகிறார். தொடர்ந்து பணியாளர், “சொல்லுங்க அண்ணா… அண்ணா சொன்னாரு” எனக் கூற… ராஜா, “ஆமாங்க அதுக்குத்தான் நம்மள பாக்கத்தான் வந்திட்டு இருக்கேன்” எனச் சொல்கிறார்.
அதையடுத்து பணியாளர், “திடீர்னு கேட்டா அவ்ளோ அமௌன்ட் எங்க சார் போறது, மேலும் எப்படி சார் கடையிலிருந்து கொடுக்க முடியும்” எனக் கூறுகிறார். அதற்கு ராஜா, “நான் திடீரென கேட்கவில்லை. மேலேயிருந்து இப்பதான் லிஸ்ட் கொடுத்தாங்க” என்கிறார். பின்னர் பணியாளர், “சரிங்க சார் கடைக்கு 40,000 ரூபாய்’னா பில்டிங்காரங்க, போலீஸ்காரங்களுக்கு தனியா காசு கொடுக்கிறோம்” என ராஜாவிடம் கூறுகிறார்.
அதற்கு அவர், “நீங்க ஜம்பு அண்ணன்கிட்ட இதைப் பத்தி பேசிக்கங்க சார், எனக்குத் தெரியாது” எனச் சொல்ல… டாஸ்மாக் பணியாளர், “திடீர்னு, 40,000 ரூபா கேட்டா என்ன செய்வது, அதிகாரிகளுக்கு வேற பணம் தர்றோம்” என்கிறார். உடனே ராஜா, “ஐயா… நீங்க யார்கிட்டப் பேசணுமோ, நீங்க அங்க பேசுங்க. ஜம்பு அண்ணன்கிட்டகூட பேசுங்க நீங்க என்ன டைம்னு சொன்னிங்கன்னா நோட் பண்ணி வெச்சுப்பேன்.
அதுவரைக்கும் போன் வராது பாத்துக்குவேன். அதுமட்டும்தான் என்னால பண்ண முடியும்” எனத் தெரிவிக்கிறார். அதற்கு பணியாளர், “ஓஹோ… ஜம்பு அண்ணன்கிட்டதான் பேசணுமா?” எனக் கேட்க… ராஜா, “ஆமா சார் பேசிபாருங்க” என்கிறார்.
இப்படியாக நீளும் இந்த ஆடியோ, டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியிலும், வாட்ஸ்அப் குரூப்களிலும் பரவி வருகிறது.
இந்த நிலையில், விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் முருகேசனிடம் பேசினோம். “டாஸ்மாக் பணியாளர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டும் கரூர் கம்பெனியைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபத்தில் இந்தக் கும்பல் டாஸ்மாக் பணியாளர் ஒருவரிடம் பணம்கேட்டு மிரட்டும் ஆடியோ வெளியாகியிருக்கிறது. இப்படித்தான் எல்லோரையும் போன் மூலம் மிரட்டி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.