சென்னை: தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்.
ஆகவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காயத்ரி ரகுராமிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ‘கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களைத் தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால், அதை கட்சியின் ஊடகப்பிரிவுத் தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் கட்சியின் ஒப்புதல் பெற்றே யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும். கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.