'பாஜக ஆட்சியில் இருக்கும் வரை இது நடக்க வாய்ப்பே இல்லை!' – இம்ரான் கான் பளீச்..!

பாகிஸ்தான் – இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்க வாய்ப்பில்லை என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதற்கு வெளிநாட்டு சதி இருப்பதாகக் கூறி வருகிறார்.

இதற்கிடையே பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இவரது தலைமையிலான அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார். அண்மையில் நடைபெற்ற பேரணி ஒன்றில், இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது.

இந்நிலையில், இங்கிலாந்து தி டெலிகிராப் பத்திரிகைக்கு, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் வர்த்தகத்தை நிறுவினால் அடையக்கூடிய பொருளாதார நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும். ஆனால் காஷ்மீர் பிரச்னை முக்கிய தடையாக இருந்தது. இப்பிரச்னையை தீர்ப்பது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்தியாவில் பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் இந்த விவகாரம் மிகவும் கஷ்டம். அவர்கள் பிரச்னைகளில் தேசியவாத நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இனவெறி; அம்பலப்படுத்திய இளவரசருக்கு உயரிய விருது.!

பாகிஸ்தான் – இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால் இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் போது அது நடக்க வாய்ப்பில்லை. தேசியவாத உணர்வுகளை தூண்டி விடுவதால் பிரச்னைகளுக்கு தீர்வு காண வாய்ப்பில்லை என்ற நிலை ஏமாற்றம் அளிக்கிறது. எங்களை பொறுத்த வரை காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண பாதையை அவர்கள் (இந்தியா) வைத்திருக்க வேண்டும் என்பது தான்.

2019 ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது இந்தியாவுடனான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது. பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இயல்பான அண்டை நாடுகளின் உறவுகளை விரும்புவதாக இந்தியா பல முறை பாகிஸ்தானிடம் கூறியுள்ளது.

நான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆப்கானிஸ்தான், ஈரான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பாகிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்வேன். உண்மையில் எங்களுக்கு அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு தேவை. மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க சிறந்த வழி அனைவருடனும் நல்லுறவை வைத்து வர்த்தகம் செய்ய வேண்டும். இதன் மூலம் தான் மக்களுக்கு உதவ முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.