மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன்! தந்தையின் நினைவிடத்தை தேடி சென்ற நபர் குறித்து முதலமைச்சர் டிவிட்…

சென்னை: மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன் என தந்தையின் நினைவிடத்தை தேடி மலேசியா  சென்ற நபர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் டிவிட் பதிவிட்டுள்ளார். அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன் என தெரிவித்துள்ளார்.

தென்காசியின் வேங்கடம்பட்டியைச் சேர்ந்த திருமாறன் அவர்கள், தனது தந்தை இராமசுந்தரம் அவர்களின் நினைவிடத்தைத் தேடி மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக செய்தித்தாள்களில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து சமூக வலைதளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது டிவிட்ட சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில், ‘அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது. தென்காசியின் வேங்கடம்பட்டியைச் சேர்ந்த திரு. திருமாறன் அவர்கள், தனது தந்தை திரு. இராமசுந்தரம் அவர்களின் நினைவிடத்தைத் தேடி மலேசியாவுக்கு மேற்கொண்ட பயணம் அவரது வாழ்வின் தேடல் என்றே நான் உணர்கிறேன்.

இந்தப் பயணத்தில், திரு. திருமாறன் அவர்களது அன்பு மட்டுமல்ல, கடல் கடந்து மலேசியாவில் வாழும் தமிழர்களின் பண்பாடும் வெளிப்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்னால் திரு. இராமசுந்தரம் அவர்கள் வழங்கிய மிதிவண்டி குறித்து இன்றும் நினைவில் வைத்திருக்கும் திரு. பெருமாள், இளம் வயதிலேயே மறைந்துவிட்ட இராமசுந்தரம் அவர்களை மறவாத நாகப்பன் உள்ளிட்டோர் தமிழரின் தனித்துவமான பண்பாட்டின் அடையாளங்களே!

தாய்த்தமிழ்நாடு திரும்பிய பின் தன் தாயையும் இழந்த திரு. திருமாறன் அவர்கள், ஆதரவற்றவராக அல்லாமல், பலருக்கும் ஆதரவு தரும் ஆலமரமாக இருப்பதை படித்தபோது நெகிழ்ந்து நெக்குருகிப் போனேன். வாழ்வின் பயணத்தில் நாம் அறியும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை நமக்குக் கற்றுத்தந்து கொண்டே இருக்கிறார்கள். திருமாறனின் தொண்டு சிறக்கட்டும்! மனிதம் தழைக்கட்டும்!’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.