பாஜக கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக நடிகர் காயத்ரி ரகுராமை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளார். அதேபோல, சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ விவகாரத்தில் விசாரணை நிலுவையில் இருப்பதால், ஓபிசி தலைவர் சூர்ய சிவாவை கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு பதிலளித்த காயத்ரி ரகுராம், ” நான் பாஜகவுக்கு எதிரானவர் என்பதை ஏற்க மாட்டேன். அப்படி யார் சொன்னாலும் அறைவேன். ஒரு தனி மனிதர் கட்சியாக முடியாது. உரிய விசாரணையின்றி அதிகாரம் எந்த முடிவையும் எடுப்பது இப்படித்தான்” என்று அண்ணாமலைக்கு அவர் எதிர்வினையாற்றியுள்ளார்.
பிராமணர் vs பிராமணர் அல்லாதோர்
மேலும், கட்சியின் நடவடிக்கையை நான் ஏற்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. இடைநீக்கம் செய்யப்பட்டாலும் தேசத்திற்காக தொடர்ந்து உழைப்பேன்” என்று காயத்ரி ரகுராம் கூறினார். இதுகுறித்து காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டு வரும் கருத்துக்களுக்கு பல ரியாக்ஷன்கள் குவிந்து வருகின்றன. ”பாஜகவில் பிராமணர் vs பிராமணர் அல்லாதோர் சண்டை வெகுநாட்களாக நடக்கிறது. இப்போது தான் வெளியே தெரிய வருகிறது” என்றும் ஒரு பக்கம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அண்ணாமலையின் நடவடிக்கைக்கு மாறி மாறி ட்வீட் போட்டு வரும் காயத்ரி ரகுராம் கடைசியாக போட்டுள்ள ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை மீது குற்றசாட்டு
அதாவது, அண்ணாமலை முதல் நாளிலிருந்தே என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற விரும்பினார். நான் வலுவாக திரும்பி வருவேன்” என நேரிடையாக குற்றம்சாட்டியுள்ளார். இதுபோல தொடர்ந்து ட்வீட் போட்டு வரும் காயத்ரி ரகுராம் அண்ணாமலையை குறித்து மேலும் பல விஷயங்களை கசிய விடலாம் என்றும் தெரிகிறது. இதனால் ஆறு மாத சஸ்பெண்ட்டுக்கு பிறகும்கூட காயத்ரி ரகுராம் மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல, திருச்சி சூர்யாவும் அவர் மீது எடுக்கப்பட்டுள்ள விசாரணை விவகாரத்தில் இருந்து மீண்டும் கட்சிக்குள் இணைவாரா என்ற கேள்வி எழுகிறது. அந்த ஆடியோவிலும், என்னை கட்சியில் இருந்து நீக்கினால் நீக்கட்டும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை என்று அவர் பேசியது கட்சி தலைமையை கடுப்பேற்றியுள்ளது. இவர் விவாகரம் விசாரணையில் இருப்பதால் அடுத்து நடக்கப்போவது யூகிக்க முடியவில்லை. ஆனால், காசுயத்ரி ரகுராமன் அசாதாரண கருத்துக்கள் அவருக்கு நிச்சயம் பின்னடைவை உண்டாகும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.