நெல்லை: வட மாநிலங்களில் குளிர் காரணமாக முட்டை நுகர்வு அதிகரிப்பு மற்றும் உலக கால்பந்து போட்டி நடைபெறும் கத்தாருக்கு 1.50 கோடி முட்டை ஏற்றுமதி காரணமாக தமிழகத்தில் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நெல்லையில் சில்லறை விற்பனை விலை ரூ.7ஐ தொட்டுள்ளது. ஏழைகளின் அசைவ உணவாக கருதப்படும் முட்டை அனைத்து தரப்பினராலும் தினமும் விரும்பி உண்ணப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு முட்டையை உணவாக எடுத்துக்கொள்ள மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். இந்தியாவில் முட்டை உற்பத்தி கேந்திராமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது. முட்டை விலை தினமும் சந்தை நுகர்வுக்கு ஏற்ப இங்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. இங்கிருந்து இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் முட்டை அனுப்பப்படுகிறது. குறிப்பாக அரபு நாடுகளுக்கு தினமும் விமானங்களில் நாமக்கல் முட்டை பறக்கின்றன.
வட மாநிலங்களில் குளிர் காலம் தொடங்கிவிட்டால் முட்டை நுகர்வு அதிகரிப்பது வழக்கம். தற்போது அங்கு குளிர் காலம் தொடங்கியதால் வட மாவட்டங்களுக்கு பாக்ஸ்சில் அனுப்பப்படும் சிறிய முட்டைகள் அதிகளவு செல்கிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக விலை ஏறுமுகமாக உள்ளது. இந்த நிலையில் கத்தாருக்கு வாரத்தில் 50 லட்சம் முட்டை அனுப்பி வந்த நிலையில் அங்கு தற்போது உலக கோப்பை கால்பந்துப்போட்டி நடப்பதால் நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு அனுப்பப்படும் முட்டை அளவு 50 லட்சத்தில் இருந்து ஒன்றரை கோடியாக உயர்ந்துள்ளது. திடீரென 3 மடங்கு முட்டை அதிகரித்துள்ளதால் முட்டைக்கான தேவை மேலும் உயர்ந்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கோழித்தீவனம் மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் துருக்கி போன்ற நாடுகளில் முட்டை விலையை ஏற்கனவே உயர்த்திவிட்டனர்.
அங்கு 360 முட்டைகள் கொண்ட ஒரு பெட்டி விலை கடந்த மாதம் 20 டாலர்களில் இருந்து 36 டாலர்களாக உயர்த்தியது. அந்த நாட்டை விட நாமக்கல்லில் முட்டை விலை குறைவு என்பதால் அரபு நாடுகள் நாமக்கல் முட்டை கொள்முதல் செய்ய விரும்புகின்றனர். கத்தாருக்கு முட்டை செல்வது அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் நெல்லையில் இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.5.80க்கும், சில்லறை விற்பனை கடைகளில் அதிகபட்சமாக ரூ.6.50 முதல் ரூ.7 விலையிலும் விற்கின்றனர். இதுகுறித்து முட்டை மொத்த விற்பனையாளர்கள் கூறுகையில், கடந்த சில தினங்களாக ஆர்டர் செய்யும் அளவிற்கு முட்டை கிடைக்கவில்லை. இந்த தட்டுப்பாடு நீடிப்பதால் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றனர்.