மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2026 அக்டோபரில் எவ்வாறு முடிக்கப்படும்? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்த மத்திய அரசு கடந்த 2019 ஜனவரி மாதம் அதற்கான அடிக்கல்லை நாட்டியது. ஆனால், மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென் தமிழகம் மற்றும் கேரளா மாநில மக்கள் பெரும் பயன் அடைவார்கள் என்பதால், மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தேன்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு 36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என உறுதி அளித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. ஆகவே நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறிய மத்திய சுகாதாரத்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என முடிவெடுப்பதற்காக நீதிபதிகள் ரமேஷ், புகழேந்தி அமர்வு முன்பாக இந்த வழக்கு பட்டியலிடப்பட்டது. விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக 1977.8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான காலம் 5 வருடம் 8 மாதம் ஆகும் (மார்ச் 2021 முதல் அக்டோபர் 2026).
* அதிக செலவு மற்றும் அதிக நேரத்திற்கான அனுமதியை மத்திய சுகாதாரத்துறை வழங்கியுள்ள நிலையில், அது செலவினத்துறையின் பரிசீலனையில் உள்ளது.
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் எம்பிபிஎஸ் படிப்பு, தற்போது ராமநாதபுரம் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக துணை இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது” என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், அக்டோபர் 2026ற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எவ்வாறு முடிக்கப்படும்? என்பது குறித்த விரிவான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை செயலர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM