அதிமுக உடனான பாஜக கூட்டணி தொடர்கிறது: அண்ணாமலை விளக்கம்

சென்னை: “அதிமுக உடனான கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருக்கிறோம். இதில் எந்த பிரச்சினையும் கிடையாது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் தனியார் தேநீர் கடையை திறந்து வைத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எனக்கு அது பற்றி தெரியவில்லை. ஆளுநர் சார்பில் நான் பேச முடியாது. என்னைப் பொறுத்தவரை, இந்த ஆன்லைன் ரம்மிக்கு தடை என்பது காலத்தின் கட்டாயம். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.

இந்த ஆன்லைன் ரம்மிக்கு தமிழ்நாடு அரசு தடையைக் கொண்டு வந்துபோதே, பாஜக அதனை வரவேற்றது. ஆளுநர் தரப்பில் வேறு ஏதாவது கருத்துக் கேட்கப்பட்டுள்ளதா என்பது குறித்து எனக்கு தெரியாது. அவர் சார்பில் நான் பேச முடியாது. பாஜக சார்பில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு முழு ஆதரவு உள்ளது” என்றார்.

அப்போது அவரிடம், அதிமுக தனித்துப் போட்டி என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “தேசிய ஜனநாயக கூட்டணியை பாஜகவின் நாடாளுமன்ற குழு உருவாக்கியது. கூட்டணியில் எந்த கட்சிகள் இருக்க வேண்டும். என்ன மாதிரியான தலைவர்கள் இருக்கவேண்டும் என்பதெல்லாம் அந்த குழுதான் முடிவு செய்தது. அந்த அடிப்படையில் கூட்டணியாக தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

கட்சியின் மாநிலத் தலைவராக சொல்கிறேன், அதிமுக உடனான கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருக்கிறோம். இதில் எந்த பிரச்சினையும் கிடையாது. பிரதமர் வருகையின்போது, அதிமுகவிலிருந்து வந்து பார்க்கின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரிவு உபசார விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதேநேரத்தில் 2024 எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. மாநிலத் தலைவராக பாஜக இவ்வளவு இடங்களில் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

கட்சி வளர்ந்துள்ளது, கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் இருக்கிறது. இத்தனை இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற எங்களது கட்சி சார்ந்த கருத்துகளை எல்லாம் கூறுவோம். கூட்டணி எப்படி அமையும், எத்தனை இடங்கள் கொடுப்பார்கள், கூட்டணியில் அனைவரையும் சேர்க்க முடியுமா என்பது குறித்தெல்லாம் மத்தியக் குழு முடிவு செய்வார்கள்.

எனவே, எங்களைப் பொறுத்தவரை கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது இல்லை. கூட்டணியில் தொடர்கிறோம். ஆரோக்கியமான முறையில் சென்று கொண்டிருக்கிறது. பாஜகவின் வளர்ச்சி என்பது அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் உள்ளன. எத்தனை இடங்களில் போட்டி என்பதை முடிவு செய்ய இன்னும் காலம் இருக்கிறது” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.