குருதி கசிவு நிலையுடன் ,டெங்கு நோயாளர்கள் சிகிச்சைக்காக வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் தற்பொழுது குருதி கசிவு நிலையுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதாக அம்மாவட்டத்தின் பிராந்திய சேவைகள் பணிப்பாளர் ரி. வினோதன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது .இருப்பினும், இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார்.

காய்ச்சல், தலைவலி உள்ளடங்களாக டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று உரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக நீரை சேகரித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தாங்கிகள் மற்றும் வீட்டினுள் அடிக்கடி சுத்தப்படுத்த படாத சிறிய பாத்திரங்கள் மற்றும் பூச்சாடிகள் போன்றவற்றில் டெங்கு நுளம்பு முட்டையிட்டு, குடம்பி கூட்டுப்புழுக்கள் உருவாவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த வருடம் இது வரை மன்னார் மாவட்டத்தில் 236 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 118 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதத்தில்  33 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும்  தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.