`சமையலறை முதல் கழிவறை வரை… எதுவுமே சரியில்லங்க’- ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் வேதனை

ஆரணி அருகே ஆதிதிராவிடர் மாணவர் விடுதி போதிய பராமரிப்பின்றி காணப்படுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளி மாணவர்கள் விடுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்று மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த அரசு ஆதிராவிடர் மாணவர்கள் விடுதியில் 55 மாணவர்கள் தங்கி, அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.
image

தங்கள் விடுதியில் பயன்பாட்டிலுள்ள கழிப்பறை, குளியலறை அசுத்தமடைந்தும் பாசிப்படிந்தும் இருப்பதாக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அவர்கள் சொல்வதுபோலவே அந்த இடங்களும் காட்சியளிக்கின்றன. கழிவறை மற்றும் குளியலறை சுற்றிலும் உள்ள ஜன்னல் கம்பிகள் துருப்பிடித்த நிலையில் ஜன்னல்கள் வழியாக பாம்புகள், பூரான் உள்ளிட்ட விஷ சந்துகள் அடிக்கடி உள்ளே நுழைவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டபடியால் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய போர்வைகள் இதுவரை வழங்கப்படவில்லை என்று மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் கடும் குளிரில் இரவு நேரங்களில் படுத்து உறங்க முடியாமல் தூக்கம் இன்றி தவிப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் விடுதியில் மாணவர்களுக்கு சமைக்கப்படும் சமையலறை சுத்தமில்லாமல் இருப்பதாகவும், தங்களுக்கு விறகு அடுப்பில் சமைத்து உணவுகள் வழங்கப்படுவதாகவும், கேஸ் அடுப்பு இருந்தும் அது பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
image

விடுதி ஆரம்பிக்கப்பட்டு இந்நாள் வரை இந்த ஆதிராவிடர் நல விடுதிக்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படவில்லை என்று விடுதியில் பணிபுரியும் சமையலர் தெரிவித்துள்ளார். இந்த விடுதிக்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர்கள் எங்கே செல்கின்றன என விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.