புதுடில்லி: கங்கை நதியில் முத்துசாமி தீட்சிதர் மூழ்கி எழுந்தபோது கடவுள் சரஸ்வதி தேவி அவருக்கு பரிசாக அளித்த வீணையை பற்றி செய்தியை உலகுக்கு தெரியப்படுத்திய நமது தினமலர் செய்தியை ‛டுவிட்’ செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியந்து பாராட்டியுள்ளார்.
உ.பி மாநிலம் காசியில் நடந்து வரும் ‛காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பிரதமர் மோடி பங்கேற்று துவங்கி வைத்திருந்தார். அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜா, ‛தமிழகத்துக்கும், காசிக்கும் தொடர்பு இருக்கிறது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் முத்துசாமி தீட்சிதர். காசியில், கங்கை நதியில் அவர் மூழ்கி எழுந்தபோது சரஸ்வதி தேவி, அவர் கையில் வீணை ஒன்றை பரிசளித்துள்ளார். அந்த வீணை இன்னமும் இங்கிருக்கும் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.
இதனையடுத்து இந்த வீணை குறித்த தேடல் அதிகமானது. நீண்ட தேடலுக்கு பின், கோவையில் வசிக்கும் முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் வழி வந்த ஏழாம் தலைமுறை வாரிசான ஆடிட்டர் முத்துசாமியிடம் இருப்பது கண்டறியப்பட்டது.
கோவையில் ஆண்டுதோறும், ‛சத்காரியா அறக்கட்டளை’ சார்பில் நடத்தப்படும் முத்துசாமி தீட்சிதர் ஜெயந்தி கீர்த்தனாஞ்சலி இசை விழாவுக்கு அந்த வீணை எடுத்து வரப்பட்டு ஆராதிக்கப்படுகிறது.
கோவையில் பூஜிக்கப்பட்டுவரும் முத்துசாமி தீட்சிதரின் வீணையை வெளிக்கொண்டுவந்த நமது தினமலர் நாளிதழுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நமது செய்தியை ‛டுவிட்’ செய்து, ‛‛முத்துசாமி தீட்சிதர் புனித வீணை மற்றும் அவரது வழித்தோன்றல்களை கண்டுபிடித்ததற்காக தினமலருக்கு நன்றி” என வியந்து பாராட்டியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement