டெல்லி : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படலாம் என்று ஒன்றிய அரசு வார்த்தையளவில் மட்டுமே பேசுவதாக உச்சநீதிமன்றம் காட்டமாக விமர்சித்துள்ளது. ஒன்றிய அரசு தங்களுக்கு சாதகமான வகையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பதவி காலத்தை கருத்தில் கொள்ளாமல் நியமிப்பது மோசமான முன் உதாரணம் என்றும், உச்சநீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை உச்சநீதிமன்றத்தில் உள்ளது போல கொலீஜியம் முறையில் தேர்வு செய்ய உத்தரவிட கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இவற்றை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக 1991 தேர்தல் ஆணைய சட்டப்பிரிவு 4-ல் குறிப்பிடப்பட்டுள்ளதை நீதிபதி ஜோசப் சுட்டிக்காட்டினார். அதன்படி தலைமை தேர்தல் ஆணையர் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை நீடிக்கலாம் என்ற நிலையில், ஒன்றிய ஆட்சியாளர்கள் தன்னிச்சையாக இந்த சட்டப்பிரிவை தொடர்ந்து மீறி வருவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
2004 – 2014-ஆம் ஆண்டும் வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 8 ஆண்டுகளில் 6 தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பதவி வகித்துள்ளதாக நீதிபதி ஜோசப் குறிப்பிட்டார். ஆனால், தற்போது பாரதிய ஜனதா ஆட்சியில் 7 ஆண்டுகளில் மட்டும், 8 தலைமை தேர்தல் ஆணையர்கள் பதவி வகித்துள்ளதாக கூறினார். இந்த பதவியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே நியமிக்கப்படுவதால் அவர்களுடைய வயது அரசுக்கு தெரியும் என்று கூறிய நீதிபதி அதிக காலம் அவர்கள் பதவியில் இல்லாத வகையில் 65 வயதை நெருங்கும் நேரத்தில் அவர்களுக்கு பதவி அளிக்கப்படுவதாகவும் விமர்சித்தார்.
கடந்த 18 ஆண்டுகளில் எந்த ஒரு தலைமை தேர்தல் ஆணையரும் 6 ஆண்டுகள் வரை பதவியில் இருந்ததில்லை என்ற நீதிபதி ஜோசப் இது மிக மிக மோசமான போக்கு என்று விமர்சித்துள்ளார். அரசியல் சாசனத்தில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் குறிப்பிடப்பட்டது. 72 ஆண்டுகளாக அதற்கான முயற்சியை கூட ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மத்தியில் ஆளும் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் தேர்தல் ஆணையர் நியமனங்களை செய்து வருக்குன்றனர் என்றும், இதில் கட்சிகளுக்கிடையே எந்த வேறுபாடும் இல்லை என்றும் நீதிபதி கே.எம்.ஜோசப் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது.