வங்க கடலில் சில தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் வட தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வட தமிழகத்தில் மழை ஓய்ந்த பின்னர் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே நீடித்ததால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கனமழைக்கு தயாராகி வந்த சென்னை உள்ளிட்ட வட மாவட்ட மக்கள் ஏமாற்றமடைந்தனர். கனமழை பெய்யாத நிலையில் குளிர் வாட்டி எடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையே 25 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலேயே உள்ளது. இதனால் சென்னை ஊட்டியாக மாறிவிட்டது, கொடைக்கானலாக மாறிவிட்டது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னையில் மழை பெய்யாவிட்டாலும் வட தமிழக மாவட்டமான ராணிப்பேட்டையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இதன் காரணமாக இன்றும் நாளையும் ( 23.11.2022 மற்றும் 24.11.2022 ) வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் 25.11.2022 மற்றும் 26.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.