பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளரும், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா சிவா தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாக பேசியும், கொலை மிரட்டலும் விடுத்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள் மீது கை வைத்தால் அவர்களை சும்மா விடமாட்டேன் என சூளுரைத்த அண்ணாமலையின் தலைமையின் கீழே இப்படி நடந்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என அண்ணாமலை அறிவித்தார். மேலும் காயத்ரி ரகுராமையும் அண்ணாமலை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. யாரையும் விடப்போவதில்லை. கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். வரும் காலத்தில் களையெடுப்பது உறுதி. பாஜகவில் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும். பாஜக நாகரிகமான அரசியல் செய்து வருகிறது. சூர்யா சிவா தகாத முறையில் பேசியுள்ளார். இன்று மாலைக்குள் அறிக்கை கேட்டுள்ளேன். காயத்ரி ரகுராம் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை.
தவறு செய்தவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை பாஜக வரவேற்றது. முழுமையாக ஆதரிக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி தொடரும். பாஜக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுமா என்பது தொடர்பான கேள்வியை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக பாஜக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. தமிழக பாஜக பேருந்துபோலதான். பழையவர்களை இறக்கிவிட்டால் தான் புதியவர்கள் ஏற முடியும்” என்றார்.
முன்னதாக அண்ணாமலை குறித்து பேசிய காயத்ரி ரகுராம், “பெண்களுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தேன். நான் கட்சியை களங்கப்படுத்தியதாக தெரியவில்லை. எனது பணியில் நான் உண்மையாகவும், சரியாகவும் இருந்தேன். இதனை மிகவும் உறுதியாக கூறுகிறேன். இது மக்களுக்கும் நன்கு தெரியும். என்னை நீக்கினாலும்கூட தேசத்துக்காகவும், கட்சிக்காகவும் அவர்கள் வேண்டாம் என்று கூறினாலும் தொடர்ந்து பணி செய்வேன்.
பிரமாணர்களுக்கு எதிராக அண்ணாமலை செயல்படுகிறார். கட்சியில் எந்த பிராமணரும் பதவிக்கு வரக்கூடாது என்பதில் அண்ணாமலை தெளிவாக இருக்கிறார்” என்றார்.