“2026-ம் ஆண்டு பா.ம.க தலைமையில் ஆட்சி அமைப்போம். அதற்கேற்ப 2024 தேர்தலில் வியூகம் அமைப்போம்” என மீண்டும் ஒருமுறை அறிவித்திருக்கிறார், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ். ஒருபுறம், `எங்கள் தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம்’ என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில், 2019, 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, எங்கள் தலைமையில் ஆட்சி என அறிவித்திருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. உண்மையில் அன்புமணியின் திட்டம்தான் என்ன?
பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றதிலிருந்து கட்சியின் செயல்பாடுகள் வேகமெடுத்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து கட்சிக்கொடியை ஏற்றிவைத்து நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார் அன்புமணி. தவிர, ஏற்கெனவே கட்சிப் பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். மறுபுறம், போதைப்பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யப் போராட்டம், தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மூன்று நாள் நடைப்பயணம், அரியலூர் – சோழர் பாசன திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி நடைப்பயணம் என பம்பரமாகச் சுழன்று வருகிறார் அன்புமணி.
இந்தநிலையில், தருமபுரி மொரப்பூர் ரயில்வே இணைப்பு திட்டம் குறித்தும், தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள ஏனைய ரயில்வே திட்டங்கள் குறித்தும் தென்னக ரயில்வேயில் பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை கடந்த திங்கட்கிழமை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் அன்புமணி. தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அன்புமணியிடம், எடப்பாடி பழனிசாமியின் மெகா கூட்டணி அறிவிப்பு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பியபோதுதான் மேற்கண்ட கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் அன்புமணி. அவரிடம் அப்போது மெகா கூட்டணியில் பாமக இருக்குமா, இருக்காதா என பத்திரிகையாளர் ஒருவர் மீண்டும் கேள்வியெழுப்ப, “பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று சொல்கிறோம்.., மீண்டும் கூட்டணியில் இருப்போமா, இல்லையா எனக் கேள்வி கேட்கிறீர்கள்?” எனக் கடிந்துகொண்டார் அன்புமணி.
“2016-ல் தனித்துப் போட்டியிட்டபோது சில விஷயங்களைத் தவறவிட்டோம். இந்தமுறை கண்டிப்பாக விடமாட்டோம். இன்னும் ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் எங்களுக்கான வலுவான கட்டமைப்பை உருவாக்க பல்வேறு வியூகங்களை வகுத்துவருகிறோம்” என்கிறார்கள் பாமக நிர்வாகிகள்.
இதுகுறித்து பாமகவின் முன்னணி நிர்வாகிகள் நம்மிடம் பேசும்போது,
“அண்ணன் அன்புமணியின் தற்போதைய வேகம் என்பது அசுரத்தனமானது. 2016-ல் நாங்கள் தனித்துப் போட்டியிட்டிருந்தாலும், அதற்கு முன்பாக மிகப்பெரிய அளவில் களப்பணி எதுவும் செய்யவில்லை. ஆனால், அண்ணன் கட்சியின் தலைவரானதிலிருந்து மிக வேகமாக வேலைகள் நடந்துவருகின்றன. வட மாவட்டங்கள் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமனம் முடிந்துவிட்டது. தென்மாவட்டங்களில் புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கான வேலைகள் தொடங்கியிருக்கின்றன. முன்பெல்லாம் கூட்டங்களுக்கு வந்தால், நிகழ்ச்சி முடிந்ததும் அண்ணன் கிளம்பிவிடுவார். ஆனால் இப்போது இரண்டு, மூன்று மணி நேரம் கூட காத்திருந்து தொண்டர்களுடனும் மக்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். அதுமட்டுமல்ல, வட மாவட்டங்களில் நீர் மேலாண்மைக்கு நடைப்பயணம் சென்றதைப்போல, தென் மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறார். குறிப்பாக, நம்பியாறு, கருமேனியாறு, தாமிரபரணி இணைப்புத்திட்டத்தை செயல்படுத்தக்கோரி அண்ணன் நடைபயணம் செல்லவிருக்கிறார்.
முன்பைவிட மக்கள் மத்தியில் அண்ணனுக்குச் செல்வாக்கு கூடியிருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால், சாதி ரீதியான முத்திரைகளும் இப்போது எங்கள் கட்சியின்மீது பெரியளவில் இல்லை. மதத்தைவைத்து, இன அடையாளங்களை முன்வைத்து அரசியல் செய்பவர்களுக்கு மத்தியில் வளர்ச்சியை முன்வைத்து அரசியல் செய்கிறார் அண்ணன் அன்புமணி. இன்னும் மூன்றரை ஆண்டுகால களப்பணியில் இதில் இன்னும் பல மாற்றங்கள் உண்டாகும். எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் நாங்கள் கூட்டணிக்குத் தயாராகவே இருக்கிறோம். 2024 தேர்தலில் நாங்கள் கூட்டணியில் போட்டியிட்டாலும், எங்கள் பலத்துக்கு ஏற்பட இடங்களைக் கேட்டுப்பெறுவோம், நிச்சயமாக அந்த இடங்களில் வெற்றி பெறுவோம். இரண்டு ஆண்டுகள் மக்களுக்காக சிறப்பாகப் பணியாற்றினால், அதை வைத்து 2026 தேர்தலில் எங்கள் இலக்கை எட்டுவோம்” என்கிறார்கள் நம்பிக்கையாக.
கூட்டணி பற்றி அன்புமணி தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து, அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேலிடம் பேசினோம்..,
“அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டோம் என அவர் எங்கேயும் கூறவில்லை. அவர்கள் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கான, அவர்கள் கட்சியை முன்னிலைப்படுத்துவதற்கான வார்த்தையாகத்தான் இதை நாம் பார்க்கவேண்டும்” என்பதோடு முடித்துக்கொண்டார்.