பிக் பாஸ் 6 நாள் 44: `உங்க நம்பர் குடுங்க!' – ரச்சிதாவிடம் கேட்ட ராபர்ட்; உக்கிரமான நீதிமன்ற டாஸ்க்

‘இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது; புதுமையான மனிதர்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல; வழக்காடும் நானும் புதுமையான மனிதன் அல்ல..’ என்பது ‘பராசக்தி’ திரைப்படத்தில் வரும் வசனம்.

அசிம் – அமுதவாணன்

பிக் பாஸ் வீட்டில் நடந்த நீதிமன்ற டாஸ்க்கில், விசாரணைக்கு வந்த முதல் வழக்கே பயங்கர விசித்திரமாக இருந்தது. அந்த வழக்கின் அடிப்படையிலேயே முகாந்திரம் இல்லை. யூகத்தின் பெயரில் சொல்லப்பட்ட ஒரு கருத்திற்காக, ஒருவரை குற்றவாளி என்று குற்றம் சாட்ட முடியாது. இந்த வழக்கு நீதிமன்றத்திற்கே முதலில் வந்திருக்கக்கூடாது. ஆனால் இந்த உப்புச் சப்பற்ற கேஸை வைத்துக் கொண்டு ‘குத்தினா கத்துவேன்.. கத்தினா குத்துவேன்’ என்கிற காமெடி போல இவர்கள் ஆடிய டிராமா இருக்கிறதே..?! தாங்க முடியவில்லை யுவர் ஆனர்!

நாள் 44-ல் நடந்தது என்ன?

‘அட்ரா.. அட்ரா..’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. இதில் வரும் ஹீரோ அஹிம்சையில் அசாத்திய நம்பிக்கையுள்ளவர் போல. ‘அடிடா.. அடிடா..’ என்ற யாரையோ கெஞ்சிக் கொண்டிருந்தார். ’28 வயசு ஆகுது.. முடி நரைக்க ஆரம்பிச்சிடுச்சு. கல்யாணம் பண்ணி செட்டில் ஆகணும்’ என்று ராம் புலம்பிக் கொண்டிருந்தார். ‘எந்த மாதிரி பொண்ணு வேணும்?’ என்று.. பிக் பாஸ் நிகழ்ச்சியை ‘கல்யாண மாலை’ நிகழ்ச்சியாக மாற்றி விடுவார் போலிருக்கிறது. ‘இப்ப இருக்கற யூத்லாம் வேஸ்ட்’ என்று ஆயிஷா கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

ராபர்ட்டிற்கு ஒரு உயர்ந்த லட்சியம் இருக்கிறது. இந்த வாரம் வெளியேறுவதற்குள் ரச்சிதாவின் கான்டாக்ட் நம்பரை வாங்கி விட வேண்டுமென்பதுதான் அது. (ஆஹா! இதுவல்லவோ லட்சியம்?!). அதற்காக ஷோ ஆரம்பித்ததில் இருந்தே முயன்று கொண்டிருக்கிறார் போல. ‘சொல்லிட்டா போச்சு மாஸ்டர். ஆனா பேப்பர், பேனா இல்லையே?!’ என்று வழக்கம் போல் கழுவும் நீரில் நழுவும் மீனாக எஸ்கேப் ஆகிக் கொண்டிருந்தார் ரச்சிதா. நல்லவேளை, அவர் பொதுவில் எண்ணைச் சொல்லி விடவில்லை. அவரின் ரசிகர்கள் கொலைவெறியுடன் பாய்ந்து குறித்துக் கொண்டிருப்பார்கள். அந்த சிம்கார்டே தீய்ந்து போகும் அளவிற்கு அழைப்புகள் குவிந்திருக்கலாம்.

ராபர்ட் – ரச்சிதா

‘நிவாஷணி சொல்றதைத்தான் க்வீன்சி கேப்பா. க்வீன்சி சொல்றதைத்தான் நிவா கேப்பா’ என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் அசிம். இவரைப் பற்றியும் யாராவது இப்படி ஆய்வு செய்து பேப்பர் சப்மிட் செய்தால் தாங்கிக் கொள்வாரா.. வீடு இரண்டாகி விடாது?! அசிமின் கமெண்ட் க்வீன்சியை அதிருப்தி அடைய வைத்தது. இது வெளிப்படையாகவே தெரிந்தது. ‘அப்படில்லாம் இல்லை’ என்று எரிச்சலுடன் மறுத்துக் கொண்டிருந்தார் க்வீன்சி.

‘எல்லாத்தையும் இழந்து நிக்கறவன் ரொம்ப டேஞ்சர்.. அவன் எதையும் செய்யத் துணிஞ்சுடுவான்’ என்பது அசிமின் அடுத்த பன்ச் டயலாக். ‘இனிமே நாமினேஷன் ஸ்டைலை புதுசா பண்ணணும். சேஃப்பா விளையாடறவன் எல்லோரையும் குத்தி வெளியே அனுப்பிடணும்’ என்று அசிம் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தது ஒருவகையில் சரியே. அவர் சொன்னது க்வீன்சி போன்றவர்களைப் பற்றியதாக இருக்கலாம்.

‘இந்த வாரம்.. நீதிமன்ற வாரம்’ – வீக்லி டாஸ்க்

‘இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க்’ என்பதை அறிவித்தார் பிக் பாஸ். ‘வீட்டு மக்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கலாம். அதற்கான நீதியைப் பெற ஒரு வாய்ப்பு. அவர்கள் தங்களின் வழக்குகளை தனியாக நின்று காமிராவில் பதிவு செய்ய வேண்டும். ‘அது ஏற்றுக் கொள்ளத்தக்கதா..’ என்பதை ஆய்வு செய்த பிறகு அந்த வழக்கு ஏற்றுக்கொள்ளப்படும். வாதியும் பிரதிவாதியும் தங்களின் வழக்கறிஞர்களைத் தேர்ந்தெடுக்கலாம். அனைவரும் கூடி நீதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும். மற்றவர்கள் ஜூரிகளாக இருப்பார்கள். (ஜூரி சிஸ்டம்லாம் இங்க கிடையாதே யுவர் ஆனர்?!) நீதிபதியை மற்றும் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக எவரும் நடந்து கொள்ளக்கூடாது’ என்கிற டாஸ்க்கின் விதிமுறைகளை வாசித்தார் அசிம்.

பிக் பாஸ் நீதிமன்ற டாஸ்க்

‘தனலஷ்மி வந்து கேப்பா.. ஒத்துக்காதீங்க.. நான் தான் உங்க வக்கீல்’ என்று கேஸிற்கு அலையும் வாய்தா வக்கீல் மாதிரி அமுதவாணனிடம் கர்ச்சீப் போட்டு இடம்பிடித்தார் அசிம்.

சாவி திருட்டு விவகாரம் தொடர்பாக ஏடிகே மீது வழக்கு தொடுக்கவிருப்பதாக காமிரா முன்பு அறிவித்தார் அசிம். வில் – அம்பு அவதூறு தொடர்பாக விக்ரமன் மீது வழக்கு தொடுப்பதாக தெரிவித்த அமுதவாணன், ‘இது ஒரு கறுப்பு சரித்திரம்’ என்று அஜித் வாய்ஸில் பேசி ‘கோர்ட் சீனுக்கு’ வார்ம்-அப் செய்து கொண்டார். ‘இது காழ்ப்பின் அடிப்படையில் போடப்படுகிற வழக்கு’ என்று இன்னொரு பக்கம் விக்ரமன் மறுத்துக் கொண்டிருந்தார்.

வழக்கு எண்.1: அமுதவாணன் Vs விக்ரமன் (வில் அம்பு)

அமுதவாணனையும் அசிமையும் கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ், அவர்களின் வழக்கு ஏற்கப்பட்டிருப்பதாக சொல்லி, வக்கீல் அசிமிடம் வழக்கை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யச் சொன்னார். (அசிமின் கையெழுத்து நன்றாக இருந்தது!) ‘இந்த சம்மனை கொண்டு போய் விக்ரமன் கிட்ட கொடுங்க’ என்று பிக் பாஸ் சொல்ல, வக்கீல் வண்டுமுருகன் ரேஞ்சிற்கு கெத்து காட்டினார் அசிம். ஒரு புன்சிரிப்புடன் சம்மனை பெற்றுக் கொண்ட விக்ரமன், தன்னுடைய வழக்கறிஞராக ஷிவினை நியமிப்பதாக பிக் பாஸிடம் தெரிவித்தார். (இந்தச் சமயத்தில் ‘திருமதி.ஷிவின்’ என்று ‘டங் ஸ்லிப்’பில் விக்ரமன் சொன்னது போல் இருந்தது).

ஷிவின், விக்ரமன்

‘நீ இலங்கைல இருந்து வந்திருக்கே.. அதனால உன்னைப் பிடிக்காமப் போயிடும். நீ போயிடு’ என்று அமுதவாணன் ஜனனியிடம் என் காதில் படுமாறு சொல்லிக் கொண்டிருந்தார்’ என்று தன் தரப்பு கோணத்தை வக்கீலிடம் விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தார் விக்ரமன். இன்னொரு பக்கம் “முதல் வாரத்தில் ஜனனிக்கு எதிராக வாக்களித்து அவரை வெளியில் படுக்க வைத்தது நான்’ என்று பாயிண்ட்டுகளை திரட்டிக் கொண்டிருந்தார் அமுதவாணன். நாக்கை மடித்து வைத்து சீரியசாக அவற்றை எழுதிக் கொண்டிருந்தார் அசிம்.

ஏடிகே நீதிபதியாக இருக்க, முதல் வழக்கின் விசாரணை ஆரம்பித்தது. அமுதவாணன் தரப்பில் தனலஷ்மி மற்றும் ஜனனி சாட்சியாக இருப்பார்கள். விக்ரமன் தரப்பில் ராம் மற்றும் ரச்சிதா சாட்சிகள். வழக்கின் சாரத்தை சொன்ன அசிம், தன்னுடைய ஓப்பனிங் ஸ்டேட்மெண்ட்டை ஆரம்பித்தார். ‘விக்ரமனின் கருத்து யூகத்தின் அடிப்படையில் மட்டுமே சொல்லப்பட்டது’ என்று ஷிவினும் தன் தரப்பு வாதத்தை வைத்தார். ‘யூகத்தை எப்படி பொதுவெளியில் உறுதியாக வைக்க முடியும்?” என்று மடக்கினார் வாதியின் வக்கீல் அசிம்.

‘டங் ஸ்லிப் ஆன’ வக்கீல் அசிம்

‘நான் அம்பாக இல்லை’ என்று ஜனனி சாட்சியம் சொல்ல, “அவங்க பேசிட்டு இருந்ததை நான் பார்த்தேன்’ என்று ராமும் இணைய, இந்தச் சமயத்தில் அசிம் ஒரு வில்லங்கமான வாக்கியத்தை வாய் தவறி சொன்னார். ‘இதன் மூலம் நிர்வாணமாக்கப்பட்டது’ என்று ‘டங் ஸ்லிப்பில் அசிம் சொன்னதை நல்ல வேளையாக யாரும் கவனிக்கவில்லை. (‘நிரூபிக்கப்பட்டது’ என்றுதான் அசிம் சொல்ல முயன்றிருக்க வேண்டும். வாரஇறுதி எபிசோடில் கமல் இதையும் கவனித்து கிண்டலடிப்பாரா?!).

அசிம்

அசிமின் குரல் உயர்ந்ததை அதிருப்தியுடன் கவனித்த நீதிபதி ‘இது ஒண்ணும் ஃபிஷ் மார்க்கெட் இல்லை. குரலை இறக்குங்க. எதுவும் புரியாம நான் இங்க வந்து உக்காந்திக்கிட்டு இருக்கல” என்றார். மீன்சந்தை என்கிற சொல் உபயோகம், கடந்த அல்டிமேட் சீசனில் பெரிய சர்ச்சையானது. நீதிபதி பொறுப்பில் இருப்பவரே அப்படிச் சொல்லியிருக்க வேண்டாம்.

இரு தரப்பு வாதங்களும் முடிந்தவுடன், ஜூரிகளின் கருத்துக்களை அறிய முடிவு செய்தார் நீதிபதி ‘அமுதவாணன் – ஜனனி வில் அம்பு இல்லை’ என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. தீர்ப்பு சொல்லும் நேரம் ‘இந்த வழக்கில் அமுதவாணனும் ஜனனியும் வில் அம்பு இல்லை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டது. விக்ரமன் சொன்னது அவர் கருத்து மட்டுமே. எனவே அவர் குற்றவாளி இல்லை. தன் தரப்பு வாதங்களை ஆணித்தரமாக முன்வைத்த அசிம் பாராட்டுக்குரியவர். அவர் வெற்றியாளர். அவர் சார்ந்திருக்கும் அணி வெற்றி பெற்றது’ என்று கம்பும் உடையாமல் பாம்பிற்கும் வலிக்காமல் தீர்ப்பளித்தார் ஏடிகே.

‘நாட்டாமை.. தீர்ப்பை மாத்திச் சொல்லு’….

“அசிம் சரியா வாதாடியிருந்தா, அவங்க பக்கம்தானே கேஸ் ஜெயிச்சிருக்கணும்? விக்ரமன் மேல சாட்டப்பட்ட குற்றம் இல்லைன்னு ஆயிட்டப்புறம் எங்க பக்கம்தானே வெற்றி?’ என்று ஷிவின் சரியான பாயின்ட்டை முன்வைத்து தீர்ப்பை கேள்விக்குள்ளாக்க, ஏடிகேவின் முகத்தில் இப்போது குழப்பம் தெரிந்தது. ‘என்னையே குற்றவாளியா மாத்திடுவாங்க போலயே’ என்று ஜொ்க் ஆனார்.

‘நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு’ என்பது போல் ஷிவின் உக்கிரமாக, ‘உங்க வாதம் சரியா இல்ல. அசிம் வெச்ச வாதம் வலுவா இருந்தது தீ்ர்ப்பு கொடுத்தாச்சு. நீங்க வெளியே போங்க’ என்று ஏடிகேவும் பதிலுக்கு ஷிவினிடம் கோபமானார். ‘உங்களுக்கு வழக்கோட அடிப்படையே புரியலை’ என்று ஆட்சேபித்த ஷிவின் வெளியேறத் தயாராக, அவரைச் சமாதானப்படுத்த முயன்றார் விக்ரமன்.

ராபர்ட் – க்வீன்சி

‘முதல் கேஸ்லயே ஊத்திக்கிட்டா என்ன செய்யறது?’ என்பது போல் பதறிய அசிம் `தந்த தீர்ப்பை மாத்தக்கூடாது’ என்று ஆட்சேபித்தார். நீதிபதி மேலும் குழப்பமாகி “சரி தீர்ப்பை மாத்தறேன்.. வில் அம்பு காரணத்தை விக்ரமன் மட்டும் சொல்லல. மத்தவங்களும் சொல்லியிருக்காங்க. எனவே விக்ரமன் குற்றவாளியில்லை’ என்று விளக்கம் அளித்தாலும் மறுபடியும் அதே தீர்ப்பைத்தான் வேறு வார்த்தைகளில் சொன்னார். ‘இந்த வழக்கே அடிப்படையில் தவறு’ என்று ஷிவின் சொன்னதுதான் சரி.

‘குற்றவாளியல்ல’ என்று தீர்ப்பு சொல்லப்பட்ட விக்ரமனுக்கு மாலை, ஆரத்தி வரவேற்பு தரப்பட்டது. ஸ்டோர் ரூமிற்குச் சென்ற ஜனனி “மாலை ஒண்ணுதான் குறைச்சல்’ என்று அதை எடுக்காமலேயே வெறுப்புடன் வெளியே வந்தார்.

“நீ முதல்ல சொன்ன தீர்ப்பு கரெக்ட். அதுலயே நில்லு. மாத்த வேண்டாம். ‘வாதத்தின் அடிப்படையில் வெற்றி’ன்னுதான் ரூல் புக்ல இருக்கு’ என்று கதிரவன் சொல்ல திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி அல்லாடினார் ஏடிகே. ‘ரெண்டு ஜட்ஜ்மெண்ட் கொடுத்துட்டாங்க’ என்று விக்ரமன் சொன்ன பாயிண்ட்டும் சரியானது. ‘நான் குற்றவாளியில்லன்னு தீர்ப்பு வந்துடுச்சே’ என்று விக்ரமன் சொல்ல, ‘அசிம்தானே ஜெயிச்சாரு.. அப்ப நான் வில்லு இல்ல’ என்று அமுதவாணன் சொல்ல ‘பத்தாங்கிளாஸ் பெயில் பெரிசா.. எட்டாங்கிளாஸ் பாஸ் பெரிசா’ காமெடி மாதிரி ஆனது.

கூந்தலை வாரி முடிந்து சபதம் செய்த தனலஷ்மி

பிறகு விக்ரமனிடம் சென்ற ஏடிகே “உங்க லாயர் சரியா வாதாடினாங்களா?” என்று கேட்க “இல்லை.. ஸ்ட்ராட்டஜின்னுல்லாம் சொன்னாங்க. ஆனா அது அவங்க பாயிண்ட்ஸ். எனக்கே அதில் கிளாரிட்டி இல்ல’ என்று தனது வக்கீலையும் விட்டுத்தராமல் மையமாகச் சொன்னார் விக்ரமன்.

‘பிக் பாஸ் ஐயா.. இந்த வீட்ல நாலு பொண்ணுங்க என்னை முதுகில குத்திட்டாங்க. அதுல மெயின் குற்றவாளி க்வீன்சிதான். இந்த வழக்கை நீங்க கண்டிப்பா ஏத்துக்கணும்” என்று காமிரா முன்பாக காமெடி செய்து கொண்டிருந்தார் மணிகண்டன். அடுத்ததாக வந்த தனலஷ்மி வைத்த வழக்கும் பலவீனம்தான். அது தலைவர் போட்டி தொடர்பானது. “ஒருத்தர் கீழே விழுந்து கிடக்கும் போது வெற்றியை அறிவிக்கலாமா? இதை ரச்சிதா கவனிச்சிருக்கணும். எனவே அவங்க மேல நான் பிராது தரேன்” என்று முறையிட்டுக் கொண்டிருந்தார்.

தனலஷ்மி

‘இந்த வீட்டு சிஸ்டத்தையே தலைகீழா சரிப்படுத்தலாம்ன்னு ஒரு கனவோட இருந்தேன். தலைவர் போட்டில ஜெயிக்கறது எத்தனை முக்கியம்?! எனக்கு நியாயம் கிடைக்கணும்” என்று ஆயிஷாவிடம் ஆவேசமாக தனலஷ்மி சொல்ல “இந்த கேஸ் ரொம்ப முக்கியமாத் தெரியுது. ஒட்டுமொத்த தேசமே திரும்பிப் பார்க்கப் போற வழக்கா இது இருக்கும். இதுக்கு நான் வக்கீலா இருக்கேன்” என்று உற்சாகமாக ஆஜர் ஆகத் தயாரானார் ஆயிஷா.

இத்துடன் எபிசோடை முடித்திருக்கலாம். ஆனால், சீரியல்களுக்கு ‘தொடரும்’ போடும் பாணியில் அடுத்த எபிசோடிற்கான டிவிஸ்டை அவசரம் அவசரமாக பிக் பாஸ் டீம் காட்டியது. தனலஷ்மியின் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு டிவிஸ்ட். ‘சாட்சி சொல்ல சம்மதம் இல்லை’ என்று ஷிவினும் மைனாவும் மறுக்க நீதிமன்றம் பரபரப்பானது.

எதிர் தரப்பு வழக்கறிஞராக விக்ரமன் இருந்தார். அவர் தரப்பு சாட்சியங்களாக ராமும் அமுதவாணனும் தயாராக இருந்தார்கள். சாட்சிகள் பல்டி அடித்ததால் உக்கிரமான தனலஷ்மி, தலையை வாரி முடிந்து கொண்டு ‘இனிமேதான் இந்தக் காளியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறீங்க’ என்று ஆயிஷாவிடம் சபதம் ஏற்பதோடு எபிசோட் நிறைந்தது. ‘வரப் போகிற எபிசோடுகளில் எத்தனை தலைகள் உருளப் போகுதோ?’.. பிக் பாஸிற்கு கொண்டாட்டம்தான். ஹார்ட்டிஸ்க்கில் டேட்டா வழிய வழிய கன்டென்ட் கிடைக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.