புதுச்சேரி | தேர்தல்துறை, ஆட்சியர் அலுவலகத்திற்கு ஜப்தி நோட்டீஸ் – காரணம் என்ன தெரியுமா?

புதுச்சேரி: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வாடகைக்கு எடுத்த வாகனங்களுக்கு ரூ. 80 லட்சம் பாக்கி வைத்துள்ளதால் தேர்தல்துறை, ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, புதுச்சேரியில் தேர்தல்துறை 200 வாகனங்களை 2 டிராவல்ஸ் நிறுவனங்களிடம் இருந்து வாடகைக்கு எடுத்துள்ளது. அந்த வாகனங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தேர்தலுக்குப் பயன்படுத்திய தேர்தல் துறை, தேர்தல் முடிந்த பிறகு வாகனங்களுக்கான வாடகை தொகையை முழுமையாக தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதலில் பாதித்தொகை மட்டுமே தரப்பட்டதாகவும், மீதி தொகையை தர பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஓட்டுநர்கள் விவரம், அதில் பயணித்த அதிகாரிகளின் கையொப்பம் உள்ளிட்டவற்றை தேர்தல் துறை கேட்டுள்ளது. அந்த விவரங்கள் நிறுவனங்கள் சார்பில் தேர்தல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும், பாக்கித் தொகை வழங்கப்படவில்லை என்றும், இது வட்டியுடன் சேர்த்து ரூ. 80 லட்சம் ஆக உயர்ந்துள்ளதாக நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்போதைய தேர்தல் அதிகாரிகள் முதல் ஆளுநர் வரை புகார் தெரிவித்தும் பலன் இல்லாததால் புதுச்சேரி நீதிமன்றத்தில் நிறுவனங்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், புதுச்சேரி புதிய ஆட்சியர் அலுவலகம், ரெட்டியார்பாளையத்திலுள்ள தேர்தல் துறை அலுவலகம் ஆகியவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இதற்கான நோட்டீஸ் இரண்டு அலுவலக கட்டிடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது: “இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தேர்தல்துறைக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியது. எனினும், தேர்தல்துறை அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை. தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ. 80 லட்சம் வரை தேர்தல்துறை பாக்கி வைத்துள்ளதால் தேர்தல்துறை, ஆட்சியர் அலுவலக கட்டடங்களை இணைத்து ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி மறு விசாரணையில் ஆஜராகி தேர்தல்துறை தரப்பில் முடிவு தெரிவிக்காவிட்டால், கட்டிடங்களை ஏலம் விட உத்தரவிடும் முழு அதிகாரமும் நீதிமன்றத்துக்கு உண்டு.” இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.