பொறியியல் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய பட்டியலின மாணவர்கள் நாளை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது கலந்தாய்வு, துணை கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்த பட்டியலின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம் என பொறியியல் கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. நவம்பர் 25ம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இடஒதுக்கீடு வழங்கப்படும், அன்று மாலை 5 மணிக்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். நவம்பர் 25ம் தேதி இரவு 7 மணிக்கு மாணவர்களுக்கு இறுதி செய்யப்பட்ட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 278 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி முதல், நவம்பர் மாதம் 10-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது.
இதில், மொத்தம் 93,571 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 85,023 இடங்களில் மட்டுமே மாணவர்கள் கல்லூரிகளில் சென்று சேர்ந்துள்ளனர். மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வுக்குரிய சேர்க்கை விண்ணப்பப்பதிவு கடந்த 9-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி முடிவடைந்தது. இதற்கு 9,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்துள்ள மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் அரசு உதவி மையங்கள் வாயிலாக நடத்தி முடிக்கப்பட்டன. தொடர்ந்து, தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல் கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்டது. அனைத்து பிரிவினருக்கான துணைக் கலந்தாய்வு கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இணைய வழியில் நடைபெற்றது.
மேலும், எஸ்சிஏ காலியிடங்களில் எஸ்சி வகுப்பினருக்கான கலந்தாய்வு கடந்த 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதனுடன், இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு முழுமையாக நிறைவு பெறுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு கலந்தாய்வு முடிவில் 60 ஆயிரத்துக்கும் மேலான இடங்கள் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.