மின்னல் முரளி ரீமேக் உரிமையை தர மறுக்கும் இயக்குனர்

மலையாள திரையுலகில் கடந்த ஆண்டு டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான படம் மின்னல் முரளி. இயக்குனர் பசில் ஜோசப் இயக்கியிருந்த இந்தப்படம் சூப்பர்மேன் கதையம்சத்துடன் உருவாகியிருந்தது. கிராமத்தில் இருக்கும் இரண்டு சாதாரண இளைஞர்களுக்கு எதிர்பாராதவிதமாக சூப்பர்மேன் பவர் கிடைப்பதாகவும், அதில் ஒருவன் நல்லவனாகவும் ஒருவன் எதிர்பாராத விதமாக வில்லனாகவும் மாறுவதாக வித்தியாசமான கோணத்தில் இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் பசில் ஜோசப். இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக நடிகர் குரு சோமசுந்தரத்திற்கு மலையாள திரையுலகில் நிறைய வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை ரீமேக் செய்வதற்காக பாலிவுட்டிலிருந்து பல தயாரிப்பு நிறுவனங்கள் அணுகி உள்ளனர். ஆனால் படத்தின் இயக்குனர் பசில் ஜோசப், இந்தப்படத்தின் ரீமேக் உரிமையை எந்த மொழிக்கும் தர மறுத்துவிட்டார். காரணம் மலையாளத்திலேயே முதல் சூப்பர்மேன் படமாகவும், இந்தியாவிலேயே சூப்பர்மேன் கதையம்சத்துடன் உருவான முதல் மலையாளப்படமாகவும் இந்தப் படம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மின்னல் முரளி என்றால் அது இந்தப்படத்தை மட்டுமே குறிக்க வேண்டும் என்றும் வேறு மொழிகளுக்கும் ரீமேக் உரிமையை கொடுப்பதன் மூலம் இதற்கான அடையாளத்தை இழக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார் பசில் ஜோசப்.

அதேசமயம் இந்த படத்திற்கு நிச்சயம் இரண்டாம் பாகம் உண்டு என்றும், ஆனால் இன்னும் மூன்று வருடங்கள் கழித்து தான் அது துவங்கப்படும் என்றும் கூறியுள்ளார். வினீத் சீனிவாசன் பாணியில் சமீபத்தில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ள இயக்குனர் பசில் ஜோசப், தற்சமயம் நடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு மீண்டும் டைரக்ஷனில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.