மும்பை: காங்கிரஸ் எம்.பி. ராகுலுடன் பாதயாத்திரையில் பங்கேற்க நடிகர், நடிகைகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக பாஜக குற்றச்சாட்டை வைத்துள்ளது. ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி முதல், மகாராஷ்ராவில் நடைபயணம் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் யாத்திரையின்போது, இந்தி நடிகரும், திரைப்பட இயக்குநருமான அமோல் பலேக்கர் தனது மனைவியுடன் இணைந்து யாத்திரையில் கலந்து கொண்டார்.
இதற்கு 2 நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை ரியா சென், ராகுலுடன் யாத்திரையில் பங்கேற்றார்.
இந்நிலையில் ராகுல் காந்தியுடன் பாதயாத்திரையில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளுக்கு பணம் வழங்கப்படுகிறது என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா ராணே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “ராகுலுடன் பாதயாத்திரையில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளுக்கு பணத்தை வழங்குகின்றனர். இதுதொடர்பாக வாட்ஸ்-அப்பில் வந்த தகவலையும் நான் பகிர்கிறேன். நவம்பரில் ராகுல் காந்தியுடன் பாதயாத்திரையில் பங்கேற்க நடிகர், நடிகைகள் தங்களது நேரத்தை தேர்வு செய்யலாம் என்று அந்த வாட்ஸ்-அப் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதயாத்திரையில் பங்கேற்பதற்கு பணத்தை காங்கிரஸ் வழங்குவது தெரியவந்துள்ளது’’ என்றார்.
இந்நிலையில் பாஜகவின் குற்றச்சாட்டுக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் சாவந்த் கூறியதாவது: பெயரே இல்லாமல் ஃபார்வர்ட் செய்யப்பட்டிருக்கும் வாட்ஸ்-அப் தகவலை வைத்து பாஜகவினர் இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அந்த செய்தியை அனுப்பியவரின் பெயரும் இல்லை.செல்போன் எண்ணும் இல்லை. கட்சிப் பிரபலங்களுக்கு செயற்கையான ஆதரவை உருவாக்கிக் காட்டும் வேலையை எப்போதும் பாஜகதான் செய்யும். அதுபோன்ற வேலையை காங்கிரஸ் எப்போதும் செய்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.