குஜராத் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அகமதாபாத்தில் பா.ஜ.க வேட்பாளருக்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கலந்துக் கொண்டு பா.ஜ.க-வுக்காக வாக்கு சேகரித்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய அஸ்ஸாம் முதல்வர் பாரத் ஜோடோ யாத்ராவில் ராகுல் காந்தியின் புதிய தோற்றத்தை, முன்னாள் அதிபர் சதாம் உசேனுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுக்கூட்டத்தில், பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “பாரத் ஜோடோ யாத்திரையில் இருக்கும் ராகுல் காந்தி, தற்போது பார்ப்பதற்க்கு சதாம் உசேனைப் போல இருக்கிறார். தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தி, விசிடிங் புரஃபஸர் போல குஜராத் மாநிலத்துக்கு வந்துசெல்கிறார்… அவர் இமாச்சலப் பிரதேசத்தில் பிரசாரம் கூட செய்யவில்லை.
ஆனால், கவனமாக தேர்தல் நடத்தப்படாத இடங்களுக்கு மட்டுமே செல்கிறார். ஒருவேளை அவர் தோல்வி பயத்தில் இருக்கலாம். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் சேர பாலிவுட் நட்சத்திரங்களுக்கு காங்கிரஸ் பணம் கொடுத்திருக்கிறது. நடிகர்கள் பூஜா பட் மற்றும் அமோல் பலேகர் ஆகியோர் யாத்திரையில் கலந்து கொண்டவர்களில் அடங்குவர்” எனப் பேசியிருக்கிறார்.
இதற்கு முன்னதாக, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் குறித்து, “சசி தரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் பாஜகவில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்” எனப் பேசியது விவாதபொருள் ஆனது குறிப்பிடத்தக்கது.