*சொர்ணக்காடு கிராம மக்கள் எதிர்பார்ப்பு
பேராவூரணி : பேராவூரணி ஒன்றியம் சொர்ணக்காடு கிராமத்தில் 140 மீட்டர் தூரத்திற்கு இடையில் மின்கம்பம் இல்லாமல் மின்கம்பி செல்வதால் அடிக்கடி அறுந்து விழுகிறது. இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து ஊராட்சி தலைவர் மற்றும் கிராம மக்கள் சார்பில் மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,பேராவூரணி ஒன்றியம் செங்கமங்கலம் மின்வாரிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சொர்ணக்காடு கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு மின்மாற்றியிலிருந்து செல்லும் மின்பாதை நடுவில் உள்ள ஒரு மின்கம்பத்தை தொடாமல் செல்கிறது.
ஒவ்வொரு 70 மீட்டர் தூரத்திற்கும் இடையில் உள்ள மின்கம்பத்தில், மின்கம்பிகளை இணைத்து கட்டப்படவேண்டும். ஆனால் இடையில் உள்ள மின்கம்பத்தில் கட்டப்படாமல் 140 மீட்டர் தூரத்தில் உள்ள மின்கம்பத்தில் மின்கம்பிகள் கட்டப்பட்டுள்ளதால் அடிக்கடி அறுந்து விழுகிறது.
ஒரு மாதத்தில் நான்கைந்து முறை அறுந்து விழுகிறது. கடந்த மாதத்தில் இரவு நேரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.2018 ம் ஆண்டு கஜா புயல் பாதிப்பின்போது அவசரமாக மின் இணைப்பு கொடுப்பதற்காக வழக்கமாக 5 மின்கம்பிகள் மட்டுமே செல்லும் பாதையில் கூடுதலாக 2 மின்கம்பிகள் சேர்த்து 7 கம்பிகளாக அமைக்கப்பட்ட மின்பாதை அப்படியே உள்ளது.இதுகுறித்து செங்கமங்கலம் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின் கம்பி அறுந்து விழுந்து உயிர்ப்பலி ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.