மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் 7 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர், தன்னிச்சையாக செயல்படும் பொதுத்துறை நிறுவனமான பிரசார் பாரதியை உருவாக்க சட்டம் இயற்றியது. இதையடுத்து 1997ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி பிரசார் பாரதி தொடங்கப்பட்டது. இதன்மூலம் இந்தியாவிற்கென தனியாக ஒரு ஒளிபரப்பு நிறுவனம் கிடைத்தது. இதன் கீழ் ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் ஆகியவை கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து தனது செயல்பாடுகளை, ஒளிபரப்பை படிப்படியாக விரிவுபடுத்தி வந்தது.
ஆனால் வெற்றி பெற்ற ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியால் ஜொலிக்க முடியவில்லை. இதற்கு தனியார் ஒளிபரப்பு நிறுவனங்களின் வருகை ஒரு முக்கிய காரணம். இதன் காரணமாக பார்வையாளர்களை தக்க வைப்பதிலும், வருவாயை பெருக்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. உலகம் முழுவதும் உள்ள ஒளிபரப்பு நிறுவனங்கள் எந்தவொரு நிகழ்விற்கும் லைசென்ஸ் கட்டணம் மூலம் மிகப்பெரிய தொகையை வருவாயாக ஈட்டி வருவதை பார்க்கலாம். ஆனால் சேவை நோக்குடன் செயல்படும் பிரசார் பாரதி செயல்பாட்டிற்கான கட்டணத்தை மட்டுமே வசூலித்து வந்ததால் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் மிகப்பெரிய சுமையை சந்திக்க வேண்டிய சூழல் உருவானது.
உதாரணமாக பிபிசி சேவையை எடுத்துக் கொண்டால் தன்னுடைய சேனல்கள், சேவைகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் லைசென்ஸ் கட்டணமாக வசூலிக்கிறது. இதைக் கொண்டு தனது சேனல்கள் அல்லது புதிய சேவைக்கு பெரிய அளவில் முதலீடு செய்கிறது. ஆனால் பிரசார் பாரதி அப்படியான செயல்பாடுகளில் ஈடுபடாததால் தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவை பெரிய அளவில் வளர முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது. பிரசார் பாரதியின் வர்த்தக் ரீதியிலான வெற்றியானது DD FreeDish DTH மூலம் கிடைத்தது.
இதன்மூலம் 45 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளில் டிஷ் சேவை பயன்பாட்டிற்கு வந்தது. இதன் செயல்பாடுகள் மிகவும் எளிதாக இருந்தாலும் சேவைக்கான கட்டணம் என்ற வகையில் பெரிய நெருக்கடி ஏற்பட்டது. அதுமட்டுமின்றி டிஷ் சேவையை நிர்வகிக்கும் அரசு ஊழியர்களையும் கவனிக்க வேண்டியிருந்தது. இதனால் அரசிடம் இருந்து நிதியுதவி பெற்று செயல்பட வேண்டிய தேவை உண்டானது. இத்தகைய சிரமமான சூழலில் தான் 25 ஆண்டுகளை நிறைவு செய்து வெள்ளி விழா கண்டிருக்கிறது பிரசார் பாரதி.
தற்போதைய சூழலில் புதுமையான நிகழ்ச்சிகள், நவீன தொழில்நுட்பம், சிறப்பான திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர வேண்டியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் பிரசார் பாரதியின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர். இவ்வளவு பெரிய மனித வளத்தை மீண்டும் உருவாக்குவது சவாலான விஷயம் என்பதில் சந்தேகமில்லை. விற்பனை, விளம்பரம், டிஜிட்டல், ஐடி என பல்வேறு துறைகளை சேர்ந்த ஆட்களை சந்தை மதிப்பிற்கு ஏற்ப குறிப்பிட்ட ஊதியத்திற்கு வேலையில் அமர்த்த வேண்டும்.
இதையொட்டி பிரசார் பாரதி சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகள், வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரசார் பாரதியின் அடுத்த 20 ஆண்டுகள் பிரதமர் மோடியின் ’நியூ இந்தியா 2047’ என்ற இலக்கின் அடிப்படையில் பயணிக்க உள்ளது. இதற்கு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஒளிபரப்பு சேவை, நவீன அம்சங்கள் கொண்ட முதன்மையான செயல்பாடுகள் ஆகியவை அவசியமாகின்றன. அதுமட்டுமின்றி க்ளவுட் ஒளிபரப்பு மேலாண்மையும் தேவைப்படுகிறது.
மேலும் பழைய நிகழ்ச்சித் தொகுப்புகள் முதல் ரியல் எஸ்டேட் சொத்துகள் வரை அனைத்தையும் சரியாக கையாண்டு வருவாய் ஈட்டக்கூடிய வழிமுறைகளையும் வகுக்க வேண்டியுள்ளது. மொபைல் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் நேரடி மொபைல் ஒளிபரப்பு திட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும். இவற்றின் மூலம் அடுத்த 25 ஆண்டுகள் பிரசார் பாரதி இந்திய ஒளிபரப்பு சந்தையில் தன்னை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர்.