4000 இலங்கை தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் பத்து சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.
20 வருடங்களின் பின்னர் இலங்கை தாதியர்களுக்கு சிங்கப்பூரில் சுகாதாரத் துறைக்குள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின்; தொழிலாளர் மற்றும் நலன்புரிப் பிரிவின் தலைவர் நிபுன திப்புடுமுணுவ தெரிவித்தார்.
சிங்கப்பூர் சுகாதார அமைச்சினால் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படும் இந்த ஆய்வுப் பயணத்தில், சிங்கப்பூர் சுகாதார அதிகாரிகள் குழுவானது, இலங்கை தாதியர் கல்லூரி, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலை, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையொன்று மற்றும் இலங்கையின் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் நடைமுறையில் உள்ள சுகாதாரத் துறையுடன் தொடர்பான பாடங்கள் குறித்தும் ஆராய உள்ளனர்.
சிங்கப்பூரின் சுகாதாரத் துறையானது அந்நாட்டின், சுகாதார அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களால் கையாளப்படுகிறது. மேலும் அந்நாட்டிற்கு அழைத்துச் செல்லவிருக்கும் இலங்கை தாதியர்களும் தற்போது அரசாங்க மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதிகளில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.