தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வேங்கடாம்பட்டி பகுதியில் தொண்டு நிறுவனம் அமைத்து சமூக ஆர்வலராக தொண்டுகள் செய்து வருபவர் திருமாறன். இவரது தந்தை ராமசுந்தரம் என்ற பூங்குன்றன், கடந்த 1967 ஆம் ஆண்டு மலேசிய நாட்டில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். அங்கேயே அவர் இறந்ததையடுத்து, அங்கேயே அவருக்கு கல்லறை எழுப்பி விட்டு அவரது மனைவி ராதாபாய் இந்தியா திரும்பியுள்ளார். இவையாவும் 55 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்கிறது.
இந்நிலையில், தனது தந்தை இறந்து 55 வருடங்களுக்குப் பிறகு தந்தையின் கல்லறையைத் தேடி தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவுக்கு திருமாறன் தற்போது சென்றிருக்கிறார். அங்கு கூகுள் மூலம் கர்லிங் பகுதிக்கு சென்ற பூங்குன்றன், தனது தந்தை ஆசிரியராக பணியாற்றிய பள்ளியில் படித்த பழைய மாணவ மாணவியரின் உதவியோடு தந்தையின் கல்லறை கண்டுபிடித்திருக்கிறார்.
அங்கு பூங்குன்றன் பணிபுரிந்த பழைய பள்ளி தற்போது இல்லை என்பதால், மாணவர்களை திரட்டுவதில் சில சிக்கல்கள் இருந்துள்ளன. பள்ளி இல்லையென்றபோதிலும், பூங்குன்றனின் கல்லறை இன்னமும் பராமரிக்கப்பட்டே வந்திருக்கிறது. சீனர், மலாய், தமிழ் மக்கள் இணைந்து வாழும் மலேசியாவில் உள்ள அந்த மயான தோட்டத்தில் கிறிஸ்தவர், இந்து மக்கள் ஒன்றாக புதைக்கப்பட்டுள்ளனர். தந்தையின் முகத்தை தன் பால்ய வயதில் மட்டுமே கண்டிருந்த மகன் திருமாறன், பளிங்கு கல்லரையை கண்டு ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.
தந்தையின் கல்லறையை கண்ட திருமாறன், இதற்கடுத்து செய்த காரியம்தான் அங்கிருப்போரை இன்னும் நெகிழ்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. அது என்னவெனில், திருமாறன் தமிழ்நாட்டில் இருந்து தான் கொண்டு சென்ற தன் தாய் ராதாபாய்யின் கல்லறை மண்ணை தந்தை கல்லறையில் தூவியுள்ளார். பின்னர் திருமாறன், விளக்கேற்றி தாய் தந்தைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது கதைகளை மிஞ்சிய வரலாற்றுச் சம்பவம் என திருமாறன் கூறியுள்ளார். இவையாவும் காண்போரை மட்டுமன்ரி கேட்போரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM